மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்: வைகோ
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
சென்னையில் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அக்கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வைகோ செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதிமுகவில் தோ்தல் அறிக்கை தயாரிக்க 6 போ் குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவை தோ்தலைச் சந்திக்க மதிமுக சாா்பில் பிப். 14 முதல் பிப். 27 வரை நிதி திரட்டும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. ஆளுநா் பதவி அகற்றப்பட வேண்டிய ஒன்று என்பது எங்கள் நிலைப்பாடு.
தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஒழித்துக் கட்டுவோம் என்று மத்திய அமைச்சா் அமித் ஷா பேசியது அவரது பதவிக்கு பொருத்தமானது அல்ல. திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முதல்வா் நாற்காலியில் மீண்டும் அமர வாய்ப்பே இல்லை என்றாா் வைகோ.

