

திமுக ஆட்சியை மக்கள் வெறுத்துவிட்டனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் கூட்டத்திற்குப்பின் டிடிவி தினகரன் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், எங்களுடைய கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. நானும் டிடிவி தினகரனும் தெளிவுபடுத்திவிட்டோம்.
நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம். நாங்கள் அம்மா வளர்த்த பிள்ளைகள். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். எப்போது இணைந்தோமோ அத்தனையும் மறந்துவிட்டோம். இனி அம்மா விட்டுசென்ற பணியைத் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. அவரின் நிலைப்பாடும்கூட.
தமிழகத்தில் ஊழல் நிறைந்த ஆட்சியை அகற்ற வேண்டும். திமுக ஆட்சியை மக்கள் வெறுத்துவிட்டனர். மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தினமும் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் விற்காத இடமே இல்லை.
தமிழகத்தில் சிறுமி, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வரவிருக்கும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். வைகோ, திமுக குறித்தும் மு.க.ஸ்டாலின் குறித்தும் எந்த அளவிற்கு விமர்சனம் செய்திருக்கிறார்.
ஆனால் மீண்டும் திமுக உடன் வைகோ கூட்டணி சேரவில்லையா?. எமர்ஜென்சி, மிசா கொண்டு வந்த காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி அமைக்கவில்லையா?” என்று அவர் பேசினார்.
தொடர்ந்து அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு வந்துள்ளோம். தமிழகம் முழுவதும் அமமுக தொண்டர்கள் முழு மனதுடன் தேர்தல் வேலையைப் பார்ப்போம்.
எங்களிடையே பிரிவு இருந்தது உண்மை. மனஸ்தாபம் இருந்தது உண்மை. பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால், எடப்பாடியை முழு மனதுடன் ஏற்று கூட்டணியில் இணைந்துள்ளோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்துள்ளோம்.
2 மாதங்களுக்கு முன்பே கூட்டணியில் இணைவதற்கு ஒப்புக்கொண்டுவிட்டேன். நானும் எடப்பாடி பழனிசாமியும் அண்ணன், தம்பியாக ஒன்றுசேர்ந்துள்ளோம். இருவரும் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தை செய்வோம். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.