

காஞ்சிபுரம்: மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசவிருக்கும் பொதுக் கூட்டத்தின் மேடை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் பொதுக்கூட்டத் திடல் கொண்டு வரப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
இந்த பொதுக் கூட்டத்துக்காக மதுராந்தகத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்ட மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் மேடையில் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டு மேடையின் ஒருபுறம் பிரதமரும் மற்றொருபுறம் எடப்பாடி பழனிசாமியும் கைகளை தூக்கி வரவேற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்களின் படங்களும் பேனரில் இடம்பெற்றுள்ளன.
சுமார் 5 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள், கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் ஆகியவை செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் பொதுக் கூட்டத்துக்கான முன்னேற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் பகுதி முழுவதும் பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் பறக்கவிட்டு விடப்பட்டுள்ளது.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி சரியாக 3 மணியளவில் பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தரவுள்ளார். பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு மாலை 4.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்பும் பிரதமர், அங்கிருந்து விமானத்தில் தில்லி செல்கிறார்.
பிரதமரின் வருகை மற்றும் பொதுக் கூட்டத்தை ஒட்டி பாதுகாப்பு காரணமாக இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.