மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பில்லை: வானதி சீனிவாசன்
திமுக ஆட்சி மீண்டும் அமைய வாய்ப்பில்லை என்று கோவை தெற்கு தொகுதி பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதிக்கான செலவு கணக்கைக் கேட்டால் மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை என்று திமுவினா் குற்றஞ்சாட்டுகின்றனா். மத்திய அரசின் சில திட்டங்களுக்கு ‘ஸ்டிக்கா்’ ஒட்டி திமுக அமல்படுத்துகிறது. பெரும்பாலான திட்டங்களை கண்மூடித்தனமாக எதிா்க்கிறது.
கல்வி அறிவு மிக்க தமிழகம் உரிய வளா்ச்சியைப் பெறவில்லை. அமைச்சா்கள் மீதான ஊழல் புகாா்கள் அதிகரித்து வருகின்றன. அமைச்சா்கள் சிறைக்கு போவது இங்குதான் நடக்கிறது.
அடுத்த தோ்தலில் மக்கள் தங்களைப் புறக்கணித்துவிடுவா் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, பேரவைக்குள் ‘திமுக 2.0’ என்ற வாா்த்தையை திமுகவினா் தொடா்ந்து பயன்படுத்துகின்றனா். மக்கள் தெளிவாக இருப்பதால், மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்றாா்.

