

தில்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 25) தெரிவித்துள்ளார்.
எப்படியாவது ஹிந்தியை திணிக்க வேண்டும் என மத்திய அரசு துடிப்பதாகவும் ஆனால், மொழிப்போர் தியாகிகளின் மூச்சுக்காற்று தமிழர்களை இயக்கிக்கொண்டு இருப்பதால் அது நடக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று (ஜன. 25) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
''தாய் நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் வைத்த அறிஞர் அண்ணா பிறந்த மண்ணில் இருந்து பேசுவது மிகவும் பெருமை. ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் வகையில் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
மொழிப்போர் தியாகிகள் அனைவருக்கும் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியாரை போன்ற குரு, கலைஞர் கருணாநிதியைப் போன்ற சீடரைப் பெற்றவர் அறிஞர் அண்ணா.
சில நேரங்களில் அறிஞர் அண்ணாவை பார்த்தால் எனக்கே பொறாமையாக இருக்கும். மிக மிக உணர்ச்சிகரமான மனநிலையில் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.
என் அரசியல் பயணத்தின் உந்துசக்தி அறிஞர் அண்ணா. மொழிப்போர் தியாகிகளை நினைத்தால் உணர்ச்சி பொங்குகிறது.
தமிழ்நாட்டை வெல்ல முடியாது
புதிய தேசிய கல்விக் கொள்கையைப் பயன்படுத்தி மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் நம் மீது ஹிந்தியை திணிக்க வேண்டும் என ஒரு கும்பல் துடிக்கிறது.
பணத்தையும் அதிகாரத்தையும் வைத்து பணியவைக்கப் பார்க்கிறார்கள். அடிபணிந்துபோக நாம் என்ன அடிமைகளா? அண்ணா, கருணாநிதி போன்றவர்களின் பரம்பரையில் வந்த தமிழ்ப் பிள்ளைகள் நாம்.
ஹிந்தி ஆதிக்கத்துக்கு எத்தனை மொழிகள் பலியாகியுள்ளன? 1938 ஆம் ஆண்டிலிருந்தே ஹிந்தி திணிப்புக்கு எதிராகப் போராடுகிறோம். இது ஒரு பண்பாட்டு படையெடுப்பு.
தமிழ்நாட்டை அடிமைப்படுத்த தில்லியில் இருந்து படையெடுத்து வருகிறார்கள். நாம் பார்க்காத படையெடுப்பா? எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டை உங்களால் (பாஜக) வெல்ல முடியாது என உறுதிபடக் கூறுகிறேன்.
குற்றங்கள் பற்றி பேசத் தகுதி இல்லை
தோல்வியில் இருந்து பாடம் கற்காமல் உள்ளது பாஜக. மீண்டும் அதிமுகவின் தோள்களில் இருந்தவாறு பயணிக்கிறது. தேர்தல் சீசன் வந்தாலே பிரதமர் மோடியின் வடைகள் வந்துவிடும். ஆனால், இம்முறை மோடியின் வடை மாவு புளித்துவிட்டது.
டபுள் என்ஜின் எனக் கூறி வடமாநில மக்களை ஏமாற்றியதைப்போன்று தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசுகிறார் பிரதமர். ஒரு பிரதமர் பொத்தாம்பொதுவாக பேசக் கூடாது. மகாராஷ்டிரத்தில் பேச வேண்டியதை மதுராந்தகத்தில் பேசுவது நியாயமா?
பெண்களுக்காக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அதிகம். அதிக மாணவிகள் கல்லூரிக்குச் சென்று படிப்பது தமிழ்நாட்டில்தான். இந்தியாவில் அதிக பெண்கள் ஆலைகளில் பணிபுரிவது தமிழ்நாட்டில்தான்.
பாஜக ஆளும் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்களை விடுதலை செய்தது பாஜக அரசுதான்.
பெண்கள் நிலை என்ன என்பது குறித்து மணிப்பூர் சென்று பேசுங்கள். குற்றங்களைப்பற்றி பேச உங்களுக்கு (நரேந்திர மோடி) என்ன தகுதி இருக்கிறது.
பத்து தோல்வி பழனிசாமி
குஜராத் மோடியா? இல்லை, இந்த லேடியா? என தமிழ்நாடு முழுக்க ஜெயலலிதா கேட்டார். அதனையெல்லாம் மோடி மறந்துவிட்டார். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள்.
பாஜகவுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தேர்தலின்போது தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாக செய்து அனுப்புவார்கள். 2019ஆம் ஆண்டிலிருந்து எந்த தேர்தலிலும் வெற்றி காணாதவர் பழனிசாமி. அவர் சாதா பழனிசாமி அல்ல, பத்து தோல்வி பழனிசாமி.
தமிழ்நாடு ஏற்கெனவே நன்றாக வளர்ந்திருக்கிறது. நீங்கள் வந்து அதை கெடுக்காமல் இருந்தால் போதும். கடந்த நாடாளுமன்ற தேர்தல் நினைவிருக்கிறதா? தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை வந்தீர்கள்? அதற்கான பரிசுதான் அந்த தோல்வி.
2026 தேர்தல் களமானது ஆரிய - திராவிட போரின் மற்றொரு களம்தான். அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் இருந்து சொல்கிறேன், திராவிட மாடல் அரசின் ஆட்சி தொடரும்.
மொழிப்போர் தியாகிகள் மீது உறுதியெடுப்போம். 7 வது முறையாக தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைப்போம். தில்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு என்றும் தலைகுனியாது. தீ பரவட்டும்'' என முதல்வர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.