

அதிமுக மற்றும் தவெகவின் தொண்டர்கள் சமூக ஊடகங்களில் ஒருவரைஒருவர் மாறிமாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
”இதற்கு முன்னாள் ஆட்சி செய்தவர்களைப் போன்றும், தற்போது ஆட்சி செய்பவர்களைப் போன்றும் நான் ஊழல் செய்ய மாட்டேன்; தமிழகத்தில் மீண்டும் தீய சக்தி அல்லது ஊழல் சக்தி ஆட்சியில் அமரக் கூடாது” என்று விஜய் பேசியிருந்தார்.
இதுவரை திமுக மற்றும் பாஜகவை மட்டுமே நேரடியாக விமர்சித்து வந்த விஜய், மற்ற கட்சிகளை தவெகவுக்கு போட்டியாக கருதாததால் விமர்சிக்க நேரம் இல்லை என்று அதிமுகவை விமர்சிக்காததற்கு விளக்கம் அளித்திருந்தார்.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதி செய்யப்பட்டு, முதல் பிரசாரக் கூட்டமும் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றிருக்கும் நிலையில், முதல்முறையாக நேற்று அதிமுகவை விஜய் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
விஜய்யின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், அதிமுக ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி” என்று பதில் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக மற்றும் தவெக தொண்டர்கள் சமூக ஊடகங்களில் ஒருவரைஒருவர் மாறிமாறி கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
தவெகவுக்கு ஆதரவாக அக்கட்சித் தொண்டர்கள் வெளியிட்ட சித்திரிக்கப்பட்ட விடியோக்களில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அதிமுக பொதுச் செயலர் சசிகலா மற்றும் பிரதமர் மோடியின் காலில் விழுவது போன்று வெளியிட்டுள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக வெளியிட்ட சித்திரிக்கப்பட்ட விடியோக்களில், தவெக தலைவர் விஜய்யும் அவரது தந்தையும் பட வெளியீட்டுக்காக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி கால்களில் விழுவது போன்று வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து, இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எல்லை மீறி செய்யறிவு தொழில்நுட்பம் மூலம் சித்திரிக்கப்பட்ட விடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.