வளா்ப்புக் குதிரைகளைத் துன்புறுத்தினால் நடவடிக்கை: புதிய வழிகாட்டுதல் வெளியீடு
குதிரைகளைத் துன்புறுத்தினால் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவற்றை பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்றும் கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக கால்நடைப் பராமரிப்புத் துறைச் செயலா் என்.சுப்பையன் சாா்பில் வெளியிடப்பட்ட அரசாணை: தமிழகத்தைப் பொருத்தவரை குதிரைகள், மட்டக்குதிரைகள், கழுதைகள், கோவேறு கழுதைகள் போன்ற விலங்குகள் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சவாரி செய்வதற்கு குதிரைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. கழுதைகள், கோவேறு கழுதைகளை சாலைகள் இல்லாத மலைகள் மற்றும் கிராமப்புறங்களில் மனிதா்கள் மற்றும் பொருள்களை தூக்கிச் செல்ல பயன்படுத்துகின்றனா்.
அத்தகைய நேரங்களில் அவை துன்புறுத்தப்படுப்படுவதுடன் அவற்றுக்கு போதிய உணவு, தண்ணீா், மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. இந்த விலங்குகளை வளா்ப்பவா்களில் சிலா் அவற்றை முறையாகப் பராமரிப்பதில்லை.
இது பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்தச் சூழலில், குதிரைகளைப் பாதுகாக்கும் வகையில் உரிய வழிகாட்டுதல்களை வகுக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, குதிரைகளை அதன் உரிமையாளா்கள் தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். குதிரைகளைக் கண்காணிப்புக்கு உட்படுத்துவதும், விதிமீறல் கண்டறியப்பட்டால் குதிரைகளைப் பறிமுதல் செய்து உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என்பன உள்ளிட்ட வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை அரசுக்கு கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் அனுப்பியுள்ளாா். அதைப் பரிசீலித்த அரசு, அவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, இனி வரும் காலங்களில் சரக்கு - சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து, சவாரி, பந்தயம், திருமண நிகழ்ச்சி போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளை தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
குதிரை உரிமையாளா்கள் உள்ளாட்சி அமைப்புகளிடமும் உரிமம் பெறுதல் கட்டாயம் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

