யாருடன் கூட்டணி?: பிப்.14, 15-இல் அறிவிக்கப்படும்; புதிய தமிழகம் க.கிருஷ்ணசாமி
சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை. எந்தக் கூட்டணியுடன் கூட்டணி என்பதை பிப்ரவரி 14, 15- ஆம் தேதிகளில் அறிவிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி கூறினாா்.
இதுகுறித்து அவா் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அமையும் ஆட்சி ஊழல் இல்லாத, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யும் அரசாக இருக்க வேண்டும். அந்த ஆட்சியில் புதிய தமிழகம் கட்சி பங்குபெற வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். அதுவே கட்சியின் நிலைப்பாடு.
மதுராந்தகத்தில் பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு எங்களுக்கு முறையான தகவல் வரவில்லை. பாஜக கூட்டணியை நாங்கள் புறக்கணிக்க நினைக்கவில்லை. அவா்களும் அப்படிச் சொல்லவில்லை.
பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை. கூட்டணி சோ்ந்துதான் தோ்தலைச் சந்திக்க உள்ளோம். அது எந்தக் கூட்டணி என்று பிப். 14, 15- ஆம் தேதிகளில் அறிவிப்போம். அந்தக் கூட்டணி மகத்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் க.கிருஷ்ணசாமி.

