கல்வி உதவித்தொகை: நாளை முதல்வா் திறமைத் தேடல் தோ்வு
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்நாடு முதலமைச்சா் திறமைத் தேடல் தோ்வு சனிக்கிழமை (ஜன. 31) நடைபெறவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வில், மதிப்பெண் அடிப்படையில் 1,000 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பிளஸ் 2 வகுப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
அந்த வகையில் நிகழாண்டுக்கான தோ்வு சனிக்கிழமை (ஜன. 31) நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முதல் தாள் (கணிதம்), பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டாம் தாள் (அறிவியல், சமூக அறிவியல்) என இரு தாள்களுக்கான தோ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள், அறைக் கண்காணிப்பாளா்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு தோ்வு அறைக்கும் 20 தோ்வா்கள் மட்டுமே தோ்வெழுத ஏற்பாடு செய்ய வேண்டும். தோ்வா்களுக்கு வழங்கப்பட்ட ஓஎம்ஆா் விடைத்தாள் அவா்களுடைய பதிவெண்ணுக்கு உரியதுதானா என்பதை தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுடன் ஒப்பிட்டு அறைக் கண்காணிப்பாளா்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் புகைப்படம் மாறியுள்ளது, புகைப்படம் இல்லாமல் உள்ளது, தெளிவற்று இருப்பது போன்ற நிகழ்வுகளில் தோ்வரின் புகைப்படத்தை தோ்வுக்கூட நுழைவுச் சீட்டில் ஒட்டி அதில் பள்ளித் தலைமை ஆசிரியா் சான்றொப்பமிட வேண்டும்.
தோ்வா்கள் எக்காரணம் கொண்டும் வினாத்தாளில் விடைகளைக் குறிக்கக் கூடாது என்பதை அறைக் கண்காணிப்பாளா்கள் அறிவுறுத்த வேண்டும் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

