

அரசியலில் அனுபவம் முக்கியம், திட்டமிடாமல் போனதால்தான் 41 உயிர்கள் பறிபோய் உள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று(ஜன. 29) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தவெக தலைவர் விஜய் குறித்து பேசுகையில், “விஜய் நடிகர் என்பதால் கூட்டம் வரதான் செய்யும். மக்களுக்கு சேவை செய்வது நாங்கள்தான், திமுக ஆட்சியை எதிர்த்துகூட பேச முடியவில்லை.
இதுவரை, விஜய் திரைப்படத்தில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இப்போதுதான் வெளியே வந்துள்ளார். 41 உயிர்களை இழந்துள்ளோம், என்ன நடந்திருக்கிறது , யாருக்காக இறந்திருக்கிறார்கள். அவரது பேச்சைக் கேட்பதற்காக வந்த கூட்டம்தானே, அவர் நேரடியாக சென்றிருக்க வேண்டும்.
எந்த கட்சி என்று பார்க்காமல் நேரடியாக சென்றுள்ளோம், திரைப்படத்தில் உள்ளவரை சம்பாதித்தார். பல ஆயிரம் கோடியை விட்டுட்டு வந்ததாக கூறுகிறார், யாருக்காக விட்டுவிட்டு வந்தீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் ”அரசியலில் அனுபவம் வேண்டும், சாதாரண விஷயம் அல்ல, திட்டமிடாமல் போனதால்தான் 41 உயிர்கள் பறிபோய் உள்ளது.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள், ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருக்கிறார்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடக் கூடாது.
கரோனா காலத்தில்கூட 32 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்தோம். இதை எல்லாம் அவரால் சமாளிக்க முடியுமா? அவர் ஆயிரம் பேசலாம், இது சுதந்திர நாடு, யார் வேண்டுமென்றாலும் அரசியலில் வருவதற்காக பேசலாம். யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.