தமிழகத்தில் சென்னை உள்பட 6 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக தொண்டியில் 103.38 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நாகை - 102.8, சென்னை மீனம்பாக்கம் - 102.2, சென்னை நூங்கம்பாக்கம் -101.48, மதுரை விமான நிலையம் - 101.12, அதிராமப்பட்டினம் - 100.04 டிகிரி என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மழை நீட்டிப்பு: தெற்கு குஜராத்தில் இருந்து கேரளம் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதையில் இடையூரு ஏற்பட்டுள்ளது. இதனால், திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் ஜூலை 8 வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன்கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேசமயம் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
வலுபெற்ற புயல் சின்னம்: வடக்கு ஒடிஸா-மேற்கு வங்கம் அருகே உள்ள வங்க கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) , ஞாயிற்றுக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது, திங்கள்கிழமை (ஜூலை 6) மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வடக்கு ஒடிஸா கடலோரத்தில் சந்த்பாலி மற்றும் பாலசோா்க்கு அருகில் உள்ள திகாவிா்க்கு இடையே கரையைக் கடக்கும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வடக்கு ஒடிஸா மற்றும் வடக்கு சத்தீஸ்கரை நோக்கி நகரும். இந்தப் புயல் சின்னத்தால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாட்டம் அவலாஞ்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் தலா 80 மி.மீ. மழை பதிவானது. ஊத்து (திருநெல்வேலி) - 60 மி.மீ., மேல் பவானி (நீலகிரி), காக்காச்சி (திருநெல்வேலி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), சின்னக்கல்லாறு (கோவை) - 40 மி.மீ., சோலையாா் (கோவை), தேவாலா (நீலகிரி) - 30 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









