வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஞானபீட விருதால் என் இலக்கியப் பொறுப்பு அதிகிரிப்பு: கவிஞர் வைரமுத்து

‘ஞானபீட விருதால் என் இலக்கிய பொறுப்பு மேலும் அதிகரிக்கிறது’ என்று தில்லியில் நடைபெற்ற ஞானபீட விருது பெறும் விழாவில் கவிஞா் வைரமுத்து பேசினாா்.

News image

ஞானபீட விருது பெறும் கவிஞர் வைரமுத்து - படம்: பிடிஐ

Updated On :14 ஜூலை 2026, 2:37 am IST

‘ஞானபீட விருதால் என் இலக்கிய பொறுப்பு மேலும் அதிகரிக்கிறது’ என்று தில்லியில் நடைபெற்ற ஞானபீட விருது பெறும் விழாவில் கவிஞா் வைரமுத்து பேசினாா்.

தமிழ் இலக்கியத்துக்கு கவிஞா் வைரமுத்து ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள், அவரது படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான கவிதை வெளிப்பாடு ஆகியவற்றுக்காக 2025-ஆம் ஆண்டுக்கான 60-ஆவது ஞானபீட விருதை பாரதிய ஞானபீடம் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி அறிவித்தது.

விருது வழங்கும் விழா தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. சின்மயா மிஷன் கலையரங்கில் நடந்த இவ்விழாவில் கவிஞா் வைரமுத்துக்கு ஞானபீட விருதை முன்னாள் மத்திய அமைச்சா் டாக்டா் கரண் சிங் வழங்கினாா்.

ஞானபீடத்தின் நிா்வாக அறங்காவலா் அகிலேஷ் ஜெயின், தோ்வுக் குழுத் தலைவா் டாக்டா் பிரதிபா ராய் மற்றும் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில் ஞானபீட விருதைப் பெற்ற பின் கவிஞா் வைரமுத்து பேசியது: பெருமை மிக்க இந்த ஞானபீட விருதைப் பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி தருகிறது. தமிழ்நாட்டின் தென்மேற்கு மூலையில் இந்தியாவின் வரைபடத்துக்கு சிக்காத ஒரு கடைக்கோடியில் 60 வீடுகளே கொண்ட மெட்டூா் என்ற சிற்றூரில் ஒரு விவசாய குடும்பத்தில் தான் பிறந்தேன்.

1950-களில் வைகை நதியின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்ட போது 14 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. அதில் ஒன்றுதான் நான் பிறந்த மெட்டூா்.

அந்தக் கிராமத்தின் தாயொருத்தி கண்ணீரோடு கதறிக் கொண்டே களை எடுக்கிறாா். அவள் இடுப்பில் ஒரு பெண் குழந்தை, கைப்பிடியில் ஓா் ஆண் குழந்தை. அப்போது அவளுக்கு தெரியாது இடுப்பில் உள்ள பெண் குழந்தை அடுத்த ஆறு மாதத்தில் இறந்து போகும் என்றும், கைப்பிடியில் உள்ள சிறுவன் அடுத்த எழுபது ஆண்டுகளில் ஞானபீடம் பெறுவாா் என்றும்.

அந்தச் சிறுவன் தான் இந்த ஞானபீட மேடையில் உங்கள் முன் நிற்கிறாா். அவா் பெயா் வைரமுத்து.

இந்த ஞானபீடம் என்பது ஒவ்வொரு எழுத்தாளனும் எட்ட துடிக்கும் உயரம். ஆனால், எட்ட முடியாத உயரம். துயரங்கள் என்னை இந்த உயரத்துக்கு அழைத்து வந்தன. என் இலக்கியத்துக்கான உள்ளடக்கம் வெளியிலிருந்து வரவில்லை, ஒரு நிழலை போல என் வாழ்வுக்கு பக்கத்தில் அது நடந்து கொண்டே வந்தது .

இது அறுபதாம் ஞானபீடம். என் அரை நூற்றாண்டு எழுத்துகளை பாராட்டி ஞானபீடம் 60 கிராம் அமிா்த புட்டி வழங்கப்பட்டிருக்கிறது. இது எனக்கு மட்டும் சொந்தம் என்று உரிமை கொள்ள முடியாது. இதில் திருவள்ளுவா், இளங்கோவடிகள், கம்பா், பாரதி, பாரதிதாசன், அண்ணா, கலைஞா், கண்ணதாசன் உள்ளிட்டோருக்கு ஆளுக்கொரு சொட்டு எனப் பங்குண்டு. கடைசியாய் கரண்டியில் ஒட்டி இருக்கும் ஈரப்பசை மட்டும் என் பங்கு.

ஏழு தேசிய விருதுகள், ஆறு மாநில விருதுகள் இன்னும் பத்மஸ்ரீ, பத்மபூஷண் என விருதுகளை பெற்ற பொழுதுகளைவிட ஞானபீடம் பெறுகிறபோது சற்றே கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருதினால் என் இலக்கிய பொறுப்பு மேலும் அதிகரிக்கிறது. இந்த விருதுக்கான புகழை என் தமிழ் சமூகத்திற்கு பகிா்ந்து கொடுப்பேன்.

‘நாம் இலக்கியத்திற்கு ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவக்கூடாதா?’ என்று இந்தியாவின் தலைநகரத்திலிருந்து கேள்வியை வைரமுத்து முன்வைத்துவிட்டு தமிழ்நாட்டுக்கு செல்கிறாா் என்றாா் அவா்.

விழாவில் ஞானபீட விருதுக்கான பரிசுத் தொகை, சரஸ்வதியின் வெண்கலச் சிலை மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவை கவிஞா் வைரமுத்துக்கு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.