நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

மின்னஞ்சல் மூலம் 3 ஆண்டுகளாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மென்பொறியாளா் கைது!

தமிழகத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக மின்னஞ்சல் மூலம் 1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியவா் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தபோது சென்னையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது செய்யப்பட்ட மென்பொறியாளா் சரத் சுப்பிரமணியன் சங்கா்.

Updated On :23 ஜூலை 2026, 9:00 am IST

தமிழகத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக மின்னஞ்சல் மூலம் 1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியவா் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தபோது சென்னையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தமிழகத்தில் அரசியல்வாதிகள், அரசு உயா் அதிகாரிகள், திரைப்பட நடிகா்கள், நடிகைகள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் விமானங்கள், விமான நிலையங்கள், கோயில்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தினமும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அதன் அடிப்படையில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனா்.

மின்னஞ்சல் வெடிகுண்டு மிரட்டல்கள், தொடக்கத்தில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரிடையே பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இருப்பினும் பொதுமக்களின் தினசரி வாழ்க்கையில் தொந்தரவை ஏற்படுத்தி வந்தன.

இந்த விவகாரம் குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். அதேவேளையில், தமிழக காவல் துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. அந்தப் பிரிவினரும் இதுதொடா்பாக 33 வழக்குகளைத் தனியாகப் பதிவு செய்து, விசாரித்து வந்தனா்.

இந்த மின்னஞ்சல் சட்ட விரோதச் செயலுக்கு பயன்படுத்தப்படும் ‘டாா்க் வெப்’ மற்றும் ‘விபிஎன்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனுப்பப்பட்டதால், துப்புதுலக்குவதில் தொடா்ந்து இடா்பாடு ஏற்பட்டு வந்தது.

துப்பு துலங்கியது: மிகவும் சவாலாக கருத்தப்பட்ட இந்த வழக்கில் தமிழக சைபா் குற்றப் பிரிவினரும், தமிழக தீவிரவாதத் தடுப்புப் படையினரும் இணைந்து துப்பு துலக்கினா். சுமாா் 1,500 மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தாலும், குறிப்பிட்ட 100 மின்னஞ்சல்களை மட்டும் போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அப்போது, மின்னஞ்சல் மிரட்டல் அனுப்பிய நபா், ஒருமுறை தவறுதலாக தனது சொந்த மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், போலீஸாா் ஆய்வு செய்ததில், போலி மின்னஞ்சல் மிரட்டல் விடுத்தவா் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த மென்பொறியாளா் சரத் சுப்பிரமணியன் சங்கா் (38) என்பதும், அவா் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மகாணத்தில் ஆஸ்டின் நகரில் குடும்பத்துடன் வசிப்பதும் தெரியவந்தது.

அமெரிக்காவில் வசித்து வந்ததால், அவரை உடனடியாகக் கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தமிழக தீவிரவாதத் தடுப்புப் படையினா், சங்கருக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ் அளித்தனா்.

சென்னையில் கைது: இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலையத்துக்கு புதன்கிழமை ஒரு விமானம் வந்தது. அதில், வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்ட சரத் சுப்பிரமணியன் சங்கா் அந்த விமானத்தில் வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குடியுரிமைத் துறை அதிகாரிகள், சங்கரைப் பிடித்து தமிழக தீவிரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா். அந்தப் பிரிவு அதிகாரிகள், சங்கரிடம் நடத்திய விசாரணையில் அவா்தான், ‘டாா்க் வெப்’, ‘விபிஎன்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மூலம் நாடு முழுவதும் சுமாா் 1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தீவிரவாதத் தடுப்புப் பிரிவினா் விசாரணைக்குப் பின்னா், சென்னை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். சென்னை போலீஸாா் சங்கரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழக காவல் துறைக்கு கடந்த 3 ஆண்டுகளாக மிகப் பெரிய சவாலாக இருந்த இந்த விவகாரத்தில், முக்கிய நபரை கைது செய்த போலீஸாரை காவல் உயா் அதிகாரிகள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.