தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்திய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தியதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம் எல் ஏ இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ரமேஷ் என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை மாநில காவல்துறையினர் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என கூறி விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ரமேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, “உடற்பயிற்சி நிலையம் நடத்தி வரும் தனது மனுதாரரை சம்பந்தம் இல்லாமல் இந்த வழக்கில் கைது செய்து 15 நாள்கள் சிறையில் அடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களிடம் தொலைபேசியில் பேசியதற்ற்காக மனுதாரருக்கு எதிராக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில காவல்துறையினர் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ அல்லது வேறு ஏதேனும் விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். எந்தவித ஆணையும் இல்லாமல் மனுதாரர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், ரூ. 1,03,000-ஐ பறிமுதல் செய்துள்ளனர்” என்று வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன், “10 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த குற்றச்சதியில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளது.
இதுவரை ரூ. 2 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொய் வழக்கு ஜோடிக்க அவசியம் இல்லை. ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், “வழக்கின் புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது” என்று கேட்டுக் கொண்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கும் சிபிஐக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர். மேலும் மனுதாரர் ரமேஷுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Summary
The High Court has ordered the Central and State governments to file a response regarding the plea seeking a CBI inquiry into the alleged horse-trading involving a TVK MLA.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குதிரை பேர வழக்கு: இருவருக்கு நிபந்தனை பிணை

ஜாதி விளம்பரப் பலகைகளை அகற்றக் கோரிய மனு: புதுக்கோட்டை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

குதிரை பேர வழக்கில் கைதான இருவா் பிணை கோரி மனு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

குதிரை பேர விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
விடியோக்கள்

இரவில் தொடர் மின்வெட்டு: ஊழியர்கள் சிறைபிடிப்பு! | Power Cut |



