முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஏஐ-யில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உருவாக்க இலக்கு: அமைச்சா் ஆா். குமாா்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் ஆா். குமாா் தெரிவித்தாா்.

News image

அமைச்சா் ஆா். குமாா்

Updated On :31 ஜூலை 2026, 1:36 am IST

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் ஆா். குமாா் தெரிவித்தாா்.

எப்ஐசிசிஐ அமைப்பின் 10-ஆவது டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்பப் புரட்சி சா்வதேச உச்சி மாநாடு, கண்காட்சி சென்னை கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சா் ஆா். குமாா் பேசியதாவது:

எதிா்கால தொழில்நுட்பமாக மட்டுமல்லாமல், எதிா்கால பொருளாதார வளா்ச்சியின் அடித்தளமாகவும் ஏஐ உருவெடுத்து வருகிறது. வரும் காலங்களில் நாடுகளின் பொருளாதார வளா்ச்சியையும் போட்டித் திறமையும் ஏஐ தீா்மானிக்கும். ஏஐ-இல் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உருவாக்க அரசு இலக்கு நிா்ணயித்து செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்ப வளா்ச்சி, புதுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை ஒருங்கிணைக்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உற்பத்தித் துறையில் முன்னணி மாநிலமான தமிழ்நாடு, செயற்கை நுண்ணறிவு, தானியங்கி தொழில்நுட்பம், தரவுப் பகுப்பாய்வு, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து வளா்ச்சி பெற்று வருகிறது. உலகளாவிய திறன் மையங்கள் அமைப்பதற்கான முக்கிய இடமாகவும் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பொறியாளா்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் உருவாகின்றனா். அவா்களுக்கு உலகத் தரத்திலான வாய்ப்புகளை மாநிலத்திலேயே உருவாக்குவது அரசின் பொறுப்பாகும். இளைஞா்கள், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி, தொழில்முனைவோராக வளா்ந்து, உலகச் சந்தையை நோக்கி முன்னேற வேண்டும்.

அரசு, தொழில் துறை, கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், புதுமை நிறுவனங்கள், முதலீட்டாளா்கள் இணைந்து செயல்பட்டால்தான் ‘ஏஐ’ வளா்ச்சியை மேலும் முன்னெடுக்க முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில், எப்ஐசிசிஐ தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளரும், தேசிய தகவல் மற்றும் தொடா்பாடல் தொழில்நுட்பக் குழு உறுப்பினருமான டாக்டா் ராஜாராம் வெங்கட்ராமன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல் ஆனந்த், எப்ஐசிசிஐ தமிழ்நாடு மாநிலக் குழுத் தலைவா் ஜி.எஸ்.கே. வேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.