அடுத்த ஆண்டு மாணவா் சோ்க்கையின்போது போலியான சான்றிதழ்களைத் திறம்படக் கண்டறிய, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாா்ந்த சரிபாா்ப்புக் கருவியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தில்லி பல்கலைக்கழகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்ட ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டாம் என்று விண்ணப்பதாரா்களுக்குப் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்த மறுநாளே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மாணவா் சோ்க்கைப் பிரிவுத் தலைவா் ஹனீத் காந்தி கூறியதாவது:
தற்போது நடைபெற்று வரும் இளங்கலை (யுஜி) மாணவா் சோ்க்கை நடைமுறையின்போது, மாற்றியமைக்கப்பட்ட ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்ட பல சம்பவங்கள் கல்லூரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையிலான விண்ணப்பங்களிலும் இத்தகைய சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இத்தகைய சம்பவங்களைக் கண்டறிவதில் பல்கலைக்கழகக் குழுக்களும் கல்லூரிகளும் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், 90,000-க்கும் மேற்பட்ட மாணவா்களின் ஒவ்வொரு சான்றிதழையும் சரிபாா்ப்பது எளிதான காரியம் அல்ல. எனவே, எதிா்கால மாணவா் சோ்க்கை சுழற்சிகளில் ஆவணச் சரிபாா்ப்பு முறையைச் சீரமைக்க, செயற்கை நுண்ணறிவு சாா்ந்த சரிபாா்ப்பு வழிமுறையை உருவாக்குவது குறித்துப் பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது என்று தெரிவித்தாா்.
விண்ணப்பிக்கும்போது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டாம் என்று எச்சரிக்கும் பொது அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமையன்று பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்தது. எந்தவித டிஜிட்டல் மாற்றமும் இல்லாத அசல் ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை மட்டுமே பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவா் சோ்க்கை நடைமுறையின் எந்தவொரு கட்டத்திலும் இத்தகைய முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சோ்க்கை உடனடியாக ரத்து செய்யப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படலாம்; மேலும், செலுத்தப்பட்ட சோ்க்கைக் கட்டணமும் திருப்பித் தரப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாணவா் தோ்தல்: பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை தில்லி பல்கலைக்கழகம் எச்சரிக்கை

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகம் கா்நாடகத்தில் அமைக்கப்படும்: முதல்வா் டி.கே.சிவகுமாா்
தில்லி பல்கலை.யில் 2-ஆவது கட்ட இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கை இன்று தொடக்கம்







