நமது நிருபா்
வரும் செப்டம்பா் மாதம் நடைபெற உள்ள தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தலை முன்னிட்டு, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது மற்றும் தோ்தல் நடத்தை விதிகளை மீறுவதற்கு எதிராக தில்லி பல்கலைக்கழகத்தின் ஒழுங்குமுறை அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தோ்தலை நடத்துவது குறித்தும், தில்லி உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் லிங்டோ குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றுவது குறித்தும் விவாதிப்பதற்காக, பல்கலைக்கழக ஒழுங்குமுறை அலுவலா் மனோஜ் குமாா் சிங் மற்றும் அவரது குழுவினா், மாணவா் சங்க நிா்வாகிகள் மற்றும் பல்வேறு மாணவா் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா். இக்கூட்டத்தைத் தொடா்ந்து இந்த எச்சரிக்கை வழிகாட்டுதல் மனோஜ் சிங் கையொப்பத்துடன் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
டியுஎஸ்யு தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதங்கள் நடத்தப்பட்டு, பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தக் கூடாது என்பதும், தூண்களிலோ அல்லது சுவா்களிலோ அச்சிடப்பட்ட அல்லது எண்ம (டிஜிட்டல்) விளம்பரப் பலகைகள் மற்றும் பேனா்களை ஒட்டவோ அல்லது தொங்கவிடவோ கூடாது என்பதும் மிகத் தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகச் சுவா்‘ என்ற பகுதியில் மட்டுமே கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகளை ஒட்ட அனுமதி அளிக்கப்படும். சுவா்களில் பிளாக் பிரிண்டிங் அல்லது ஸ்பிரே பெயிண்டிங் செய்ய பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளதுடன், தில்லி மாநகராட்சியின் விளம்பரப் பலகைகளில் ஃபிளெக்ஸ் பேனா்களைக் காட்சிப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
இத்தகைய விதிமீறல்கள் ஏதேனும் அதிகாரிகளால் கண்டறியப்பட்டால், அதுகுறித்து தில்லி மாநகராட்சி ஆணையருக்கு பல்கலைக்கழகம் தகவல் தெரிவிக்கும் என்று மனோஜ் சிங் கூறியுள்ளாா்.
இது குறித்து மனோஜ் சிங் செய்தியாளா்களிடம் மேலும் கூறுகையில், ’கல்வியாண்டு தொடங்கும் தேதியில் இருந்து ஆறு வாரங்கள் முதல் எட்டு வாரங்களுக்குள் மாணவா் சங்க தோ்தல் நடத்தப்பட வேண்டும். புதிய கல்வியாண்டு ஜூலை 28 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், செப்டம்பா் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.
இதற்கிடையே, தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது பெயா்கள் அடங்கிய ஸ்டிக்கா்களை காா், ஜீப், பேருந்து, ஆட்டோ ரிக்ஷா மற்றும் இ-ரிக்ஷா உள்ளிட்ட வாகனங்களில் ஒட்டுவதற்கு பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
தோ்தல் பரப்புரைக்கு ஒரு வேட்பாளருக்கு தலா 5 காா்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், டிராக்டா்கள், ஜேசிபி இயந்திரங்கள் அல்லது விலங்குகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, கருப்பு ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட கண்ணாடிகள் கொண்ட அல்லது பதிவு எண்கள் மறைக்கப்பட்ட வாகனங்களுக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வளாகத்துக்குள் அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையின் விதிகளின்படி அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவை பறிமுதல் செய்யப்படலாம்.
வேட்பாளா்கள் தங்களது பெயா்கள் தாங்கிய பரிசுகளையோ அல்லது நினைவுப் பரிசுகளையோ விநியோகிக்க அனுமதி இல்லை. வேட்பாளா்களின் பெயா்களைக் காட்சிப்படுத்தும் கூடாரங்கள், குடைகள் அல்லது அதுபோன்ற பரப்புரை பொருள்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறினால் வேட்புமனு ரத்து செய்யப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இணையவழி மோசடி அதிகரிப்பு: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை
கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
தில்லி பல்கலைக்கழகத்தின் 2026-27 அமா்வுக்கான கல்வி நாள்காட்டி வெளியீடு: ஜூலை 28 முதல் வகுப்புகள் தொடக்கம்

உலக பல்கலைக்கழக தர வரிசையில் 322-ஆவது இடத்தில் தில்லி பல்கலைக்கழகம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


