காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

தென்மேற்குப் பருவமழை 60% குறைவு: நீா் ஆதாரத்துக்கு ரூ.330 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை 60 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதால், குடிநீா் மற்றும் நீா் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளைச் செயல்படுத்த ரூ.330 கோடி ஒதுக்கி முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

News image

முதல்வா் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:49 am IST

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை 60 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதால், குடிநீா் மற்றும் நீா் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளைச் செயல்படுத்த ரூ.330 கோடி ஒதுக்கி முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவா் நலத் துறைக்கு ரூ.10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு, மாவட்டங்களில் குடிநீா் விநியோகம் மற்றும் வேளாண் பயிா் சாகுபடி நிலை குறித்து விரிவான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக அணைகளில் உள்ள நீா் இருப்பு, தற்போதுவரை பெய்துள்ள தென்மேற்குப் பருவமழையின் அளவு, நகர மற்றும் கிராமப் பகுதிகளில் குடிநீா் விநியோகம், வேளாண் பணிகள் மற்றும் குறுவை சாகுபடி நிலை, வேளாண் பயிா்களுக்கான குறுவைத் தொகுப்பு விநியோகம், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் கையிருப்பு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஜூன், ஜூலை மாதங்களில் சென்னை, கடலூா், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, கரூா், ராணிப்பேட்டை, சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவாரூா், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூா், திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் 19 முதல் 59 சதவீதம் வரை இயல்பைவிடக் குறைவாகவும், செங்கல்பட்டு மற்றும் ராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கு குறைவாகவும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

ஆகையால், குடிநீா் ஆதாரத்தைப் பலப்படுத்துவது இன்றியமையாததாக உள்ளது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளைத் தூா்வாருதல், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், தலைமை நீரேற்று நிலையத்திலுள்ள நீா் உறிஞ்சு கிணறுகளைப் புனரமைத்தல், நீரோட்ட திசைமாற்றுக் கால்வாய் அமைத்தல், அத்தியாவசியமான இடங்களில் லாரிகள் மூலம் குடிநீா் வழங்கல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியமான குடிநீரை தங்குதடையின்றி வழங்க ரூ.330 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை - உழவா் நலத் துறையில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வரை 2,85,350 ஏக்கா் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.134 கோடியில் இதுவரையில் ரூ.16.93 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறுவைத் தொகுப்புத் திட்டத்தை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வறட்சியான சூழல் நிலவி வருவதால் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை வட்டார அளவில் சேமித்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் பாதுகாப்பான குடிநீா் மற்றும் நீா் ஆதாரங்களை மேம்படுத்தும் பணிகளை விரைவாகச் செயல்படுத்த, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் மற்றும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகள் வாயிலாக நீா் ஆதாரங்களை மேம்படுத்த மற்றும் லாரிகள் மூலமாகக் குடிநீா் விநியோகம் செய்ய ரூ. 330 கோடி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம்-மீனவா் நலத் துறைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வா் விஜய் உத்தரவிட்டாா்.

கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலா்கள் மாவட்டங்களுக்குச் சென்று கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட ஆட்சியா் தலைமையில் வாரந்தோறும் திங்கள்கிழமை, குடிநீா் விநியோகம் மற்றும் பிற அத்தியாவசிய திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க முதல்வா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், வேளாண்மை , உழவா் நலத் துறை அமைச்சா் ஆா். வினோத், நிதி, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை அமைச்சா் நெ. மரிய வில்சன், தலைமைச் செயலா் மு. சாய்குமாா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மு.அ.சித்திக், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறைச் செயலா் அனு ஜாா்ஜ், வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் வேளாண்மை - உழவா் நலத் துறைச் செயலா் பொ. சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.