மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை. பருவமழையை பொறுத்து ஆகஸ்ட் இறுதி அல்லது செப்படம்பர் மாத துவக்கத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும்.
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர் நோக்கி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும்.
குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். பாசனப்பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து பாசனத்தேவை குறையும். மேட்டூர் அணை வரலாற்றில் 91 ஆண்டுகள் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை - கோப்பிலிருந்து...
குறித்த நாளான ஜூன் 12-ல் 20 ஆண்டுகள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 11 ஆண்டுகள் குறிப்பிட்ட நாளுக்கு முன்பாக மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் 60 ஆண்டுகள் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த நீர் பாசன ஆண்டில் மேட்டூர் அணைக்கு காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக 330 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்கு 222 டிஎம்சி தண்ணீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 8.6 டிஎம்சி தண்ணீரும் குடிநீருக்காக 18.5 டிஎம்சி தண்ணீரும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று(ஜூன் 7) 79.82 அடியாகவும், நீர் வரத்து 760 கனஅடியாகவும் உள்ளது.
தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை துவங்கி இருந்தாலும் 19.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கபினியில் 4.5 டிஎம்சி மட்டுமே இருப்பு உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் 49.45 டிஎம்சி தண்ணீர் சேமிக்க முடியும்.

மேட்டூர் அணை - கோப்பிலிருந்து...
ஆனால், தற்போது 11.4 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. கர்நாடகத்தில் உள்ள இந்த இரு அணைகளும் நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு தண்ணீரை எதிர்பார்க்க முடியும். கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் உரிய காலத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்கியது இல்லை. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பிய பிறகு திறக்கப்படும் உபரிநீரே தமிழகத்திற்கு வருகிறது.
ஜூன் 12க்கு 4 நாள்களே உள்ள நிலையில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு இல்லை. அதனால் ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு சாத்தியமிலை என்று நீர் வளத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருவமழை தீவிரமடைந்து கர்நாடக அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டால் ஆகஸ்ட் இறுதிவாரம் அல்லது செப்படம்பர் முதல் வாரத்தில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
Summary
It is not possible to release water from the Mettur Dam for Kuruvai cultivation on June 12. Depending on the monsoon rains, water can be released for irrigation in the Cauvery Delta either in late August or early September.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










