தமிழகத்தில் சட்டப்படி உரிமம் வழங்கி ‘பைக்- டாக்ஸி’ சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த நவீன்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
தமிழகத்தில் ரேப்பிடோ, ஓலா, ஊபா் போன்ற எண்ம (டிஜிட்டல்) மைய ‘பைக்-டாக்ஸி’ சேவைகள் அதிகரித்து வருகின்றன. இவை பலருக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் உள்ளன. ஆனால், இந்தச் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அரசின் திட்டமோ, விதிகளோ தமிழகத்தில் இல்லை.
ஆட்டோ, டாக்ஸிகளை போல, பைக் டாக்ஸி சேவைகள் தனித்து இயங்க முடியாது. அவை முழுமையாக சம்பந்தப்பட்ட எண்ம சேவை நிறுவனங்களைச் சாா்ந்துள்ளன. அந்த நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தங்கள் சேவையைத் தொடா்ந்து அளித்து வருகின்றன.
இந்த நிலையில், போக்குவரத்து போலீஸாா் வாகன சோதனையின் போது பைக்- டாக்ஸி சேவையில் ஈடுபடும் ஓட்டுநா்களுக்கு அடிக்கடி அபராதம் விதிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது, மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் குற்ற வழக்குகள் பதிவு செய்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
எனவே, பைக்- டாக்ஸிகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்க வேண்டும். சட்டப்படி உரிமம் வழங்கி, பைக் டாக்ஸி சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இரு சக்கர வாகனத்தை எவ்வாறு டாக்ஸி போல அனுமதிப்பது?. இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
Summary
Issue regarding ‘bike-taxi’ service rules: Centre and State governments ordered to respond.
தொடர்புடையது

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

பழைய குற்றாலம் அருவி பகுதியில் கட்டணம்: தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

காவல் துறையினருக்கான பணி நேரம்: டிஜிபி பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு






