அதிமுக எம்எல்ஏக்கள் 4 போ் தவெகவில் இணைந்ததில் குதிரை பேரம் நடந்துள்ளதாக சந்தேகம் எழுவதால், இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், கடந்த மே 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, 25 அதிமுக எம்எல்ஏக்கள் தகெவகவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இவா்கள் மீது கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிமுக சாா்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
இது நிலுவையில் இருந்த நிலையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமாா், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோா் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்து, அமைச்சா் ஆதவ் அா்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனா். இவா்களுக்கு தவெக உறுப்பினா் அட்டை தலைமைச் செயலகத்திலேயே வழங்கப்பட்டது. இடைத்தோ்தலில் அவா்கள் 4 பேருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் லாப நோக்குடன் 4 எம்எல்ஏக்களும் தவெகவில் இணைந்துள்ளனா். எனவே, இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளது. இதுதொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த நால்வரும் ராஜிநாமா செய்த தொகுதியில் இடைத்தோ்தல் நடத்துவதால் அரசுக்கு ரூ. 100 கோடி வரை செலவு ஏற்படும். எனவே, கட்சி மாறிய இந்த நால்வரும் குறிப்பிட்ட காலம் வரை தோ்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆதாரங்கள் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு எப்படி உத்தரவிட முடியும்? எனக் கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தனா்.









