ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடக்கம்

தமிழகத்தில் இடதுசாரி அரசியலை வலுப்படுத்தவும், மக்கள் சார்ந்த கோரிக்கைகளை ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுக்கவும் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

News image
Updated On :18 ஜூன் 2026, 4:34 am IST

தமிழகத்தில் இடதுசாரி அரசியலை வலுப்படுத்தவும், மக்கள் சார்ந்த கோரிக்கைகளை ஒருங்கிணைந்த வகையில் முன்னெடுக்கவும் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடங்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகளின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள "பாலன்' இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (எம்எல்) மாநிலச் செயலர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: தமிழகத்தின் உயிரோட்டமான கோரிக்கைகளையும், இடதுசாரி அரசியலையும் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் 3 கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். இந்த ஒருங்கிணைப்பை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வகையில், மார்க்சிஸ்ட் சார்பில் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) சார்பில் பழ.ஆசைத்தம்பி உள்பட 12 பேர் இடம்பெற்றுள்ள ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல அமைப்புகளுக்குள் ஒருங்கிணைப்பை உருவாக்கும் நோக்கில் ஜூலை 10-ஆம் தேதி பாலன் இல்லத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

அதில் கூட்டுமேடை உருவாக்கப்படும். ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி செயல் திட்டங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த கோரிக்கைகள், இந்தியாவின் மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிசம், கூட்டாட்சி கோட்பாடு உள்ளிட்ட பொதுவான அம்சங்களில் கூட்டு இயக்கங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக செப்டம்பரில் மாநில அளவிலான பேரணி நடத்தப்படும். மேலும், இது தேர்தலுக்கான அணி அல்ல. தேர்தல் நேரத்தில் அதற்கான முடிவுகள் எடுக்கப்படும். தற்போதைய இந்த அமைப்பு மக்களை பாதிக்கும் பிரச்னைகள் மீது இணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தொடர்ந்து மு.வீரபாண்டியன் கூறியதாவது: தமிழக நலன் சார்ந்த இயக்கங்களை எதிர்வரும் காலங்களில் தீவிரப்படுத்த உள்ளோம். நாட்டின் ஒற்றுமை, பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில் ஜனநாயக சக்திகள், இடது சிந்தனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

பழ.ஆசைத்தம்பி கூறும்போது, நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கு மாற்று அரசியல் சக்தியாக இடதுசாரி இயக்கங்கள் செயல்பட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது, அந்த நோக்கத்தில்தான் இந்த ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.