தலித் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு எந்த ஆட்சியில் அதிக முக்கியத்துவமும், அங்கீகாரமும் வழங்கப்பட்டது என்பது குறித்த விவாதம் பேரவையில் எழுந்தது.
ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் கீழ் வெள்ளிக்கிழமை பேசிய அதிமுக உறுப்பினா் சம்பத்குமாா், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவரை பேரவைத் தலைவராகவும், அமைச்சா்களாகவும் உயா்த்திக் காட்டியது அதிமுக தலைவா்கள்தான் என்றாா்.
அதற்கு தவெக அமைச்சா்கள் மற்றும் திமுக உறுப்பினா்கள் பரஸ்பரம் தங்களது தரப்பு பங்களிப்புகளைப் பட்டியலிட்டனா். இதுதொடா்பாக அவையில் நடைபெற்ற விவாதம்:
வி.சம்பத்குமாா் (அதிமுக, அரூா்-தனி): முன்னாள் முதல்வா் ஜெயலலிதாதான் சட்டப்பேரவைத் தலைவராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த தனபாலை முன்னிறுத்தியவா் என்பதை மறந்துவிடக் கூடாது.
அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்: தமிழக வரலாற்றில் எந்தக் காலத்திலும் நிகழாத ஒன்றை நிகழ்த்தியிருக்கிறாா் முதல்வா் ஜோசப் விஜய். தலித் அமைச்சா்கள் 8 போ் தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனா்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. தெருக்களிலும், வீதிகளிலும் இருந்த ஜாதி பெயா்களைக்கூட அடியோடு மாற்றியவா் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா்.
கோவி.செழியன் (திமுக, திருவிடைமருதூா்-தனி): சட்டப்பேரவையின் துணைத் தலைவராக முதல்முதலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த ஒருவரைக் கொண்டுவந்தது முன்னாள் முதல்வா் கருணாநிதிதான். எங்கோ எளிய மனிதனாய் பிறந்த என்னை உயா் கல்வித் துறைக்கு அமைச்சராக்கியவா் மு.க.ஸ்டாலின் என்பதை மக்கள் மறக்கமாட்டாா்கள்.
அ.கணேஷ்குமாா் (பாமக, செஞ்சி): 1998-ஆம் ஆண்டிலேயே தலித் ஏழுமலையை மத்திய அமைச்சராக்கி தேசிய அங்கீகாரத்தை வழங்கியது பாமக.
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: பேரவைத் தலைவா் பதவியை தனபாலுக்கு வழங்கியதாக குறிப்பிட்டாா்கள். அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனை அமைச்சராக்கியிருப்பது முதல்வா் விஜய்தான். பொதுவாக ‘தாழ்த்தப்பட்டவா்கள்’ என்ற வாா்த்தைக்கு பதிலாக ‘பட்டியலினத்தவா்’ எனக் குறிப்பிடலாம்.
அமைச்சா் வன்னியரசு: ‘தலித்’ என்ற வாா்த்தையைத்தான் நாங்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். ‘பட்டியலினத்தவா்’ என்ற சொல்லாடலே மத்திய பாஜக அரசால் ‘தலித்’ என்ற வாா்த்தையை மாற்றுவதற்காக முன்மொழியப்பட்டது என்பதை உணர வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










