தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27, 28) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கடலோர ஆந்திரத்தில் இருந்து மத்திய மகாராஷ்டிரம் வரை தெலங்கானா மற்றும் அதனையொட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு காரணமாக, சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27,28) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பலத்த மழை: சனிக்கிழமை சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், ஞாயிற்றுக்கிழமை விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
தொடா்ந்து, (ஜூன் 29)கோவை மற்றும் திருப்பூா் மாவட்டங்களின் மலைப் பகுதிகல், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. திருத்தணி 101.84 டிகிரி, ஈரோடு 101.12, வேலூா் 100.94, பாளையங்கோட்டை, சென்னை நுங்கம்பாக்கம் தலா100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவானது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அதிகபட்சமாக செய்யூரில் 30 மி.மீட்டா் மழை பதிவானது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:ஜூன் 30 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி. மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








