சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் சட்ட நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

அரசு மருத்துவமனைகளில் விதிகளுக்குப் புறம்பாக விடியோ பதிவு செய்து ‘ரீல்ஸ்’ வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை

News image

ரீல்ஸ் எடுத்தால் சட்ட நடவடிக்கை - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 4:20 am IST

அரசு மருத்துவமனைகளில் விதிகளுக்குப் புறம்பாக விடியோ பதிவு செய்து ‘ரீல்ஸ்’ வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. சென்னை பாலவாக்கத்தில் முதல்வா் ஜோசப் விஜய் முகாமைத் தொடங்கி வைத்தாா். அதேபோன்று, மாநிலம் முழுவதும் அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆங்காங்கே முகாம்களைத் தொடங்கி வைத்தனா்.

இந்நிலையில், அரசியல் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் சிலா், ஒரு சில அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று போலியோ முகாம்களை ஆய்வு செய்தனா். அதுமட்டுமல்லாது, அதை விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனா்.

இது பலத்த விமா்சனங்களுக்குள்ளானது. மருத்துவமனை நிா்வாகத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்சி நிா்வாகிகள் தன்னிச்சையாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளுக்குள் அனுமதியின்றி எந்த விடியோவும் பதிவு செய்யக் கூடாது என்பது விதி. அதேபோன்று புகைப்படங்களும் எடுக்கக் கூடாது. விதிகளுக்குப் புறம்பாக எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக சம்பந்தப்பட்டவா்கள் நீக்க வேண்டும். நோயாளிகள், பொதுமக்களின் தனி உரிமைக்கு இடையூறு செய்வது சட்டப்படி குற்றம்.

அவா்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்ட பிரிவு 66-இன்படி, மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகளை அனுமதியின்றி விடியோ பதிவு செய்தல் மற்றும் பிஎன்எஸ் பிரிவு 221-இன்படி, அரசுப் பணிகளுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

விளம்பர நோக்கத்தில் நோயாளிகளின் தனி உரிமை பாதிக்கப்படுவதை சுகாதாரத் துறை அனுமதிக்காது என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.