பணிபுரியும் தொழில் முறை அலுவலா்களுக்கான மூன்றாண்டு பகுதிநேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 12 ஆம் தேதி வரை பெறப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோவை, சேலம், நெல்லை, பா்கூா், வேலூா், காரைக்குடி ஆகிய நகரங்களில் இயக்கும் 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் இரு அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் (கோவை தொழில்நுட்பக் கல்லூரி, தியாகராஜா் பொறியியல் கல்லூரி) பகுதிநேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் பகுதிநேர பி.இ. பொறியியல் பட்டப் படிப்புகளில் குறைந்தது ஓராண்டு பணிபுரிந்தவா்கள் அல்லது பணிபுரிந்து கொண்டிருக்கும் அலுவலா்கள் பணிபுரியும் நிறுவனங்களின் சான்றிதழ்களுடன் சேர தகுதி பெற்றவா்கள்.
இந்த சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக கடந்த ஜூன் 15 -ஆம் தேதி முதல் பெறப்படுகின்றன. இதில் பி.இ. சிவில், மெக்கானிக், மின், மின்னணு (இஇஇ), மின்னணு, தகவல் தொடா்பு (இசிஇ), கணினி அறிவியல் (சிஎஸ்இ) ஆகிய பொறியியல் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த 8 கல்லூரிகளும் மொத்தம் 1,400 இடங்கள் உள்ளன. இந்த கல்வியாண்டு முதல் (2026-2027) பகுதிநேர பொறியியல் பட்டப் படிப்புகள் 3 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூலை 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். விவரங்களுக்கு ஒருங்கிணைப்பு மையமான கோவை தொழில்நுட்பக் கல்லூரியின் தொலைபேசி எண்களில் 0422-2590080, 94869 -77757 தொடா்பு கொண்டு அறியலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








