மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவே கூடாது என முதல்வர் அறிவுறுத்தல்

News image

ஆட்சியர்கள், மாநாட்டில் முதல்வர் சி. ஜோசப் விஜய் - DIPR

Updated On :29 ஜூன் 2026, 7:33 pm IST

மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் முழக்கம்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தாரக மந்திரம் என முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 29) தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

''ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேர்வில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

ரேஷன் கடைகளில் எடை குறைபாடுகள் இல்லாமல், தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள், மின்னிணைப்பு, மின்சார விநியோகம், முதியோர் ஓய்வூதியம், சான்றிதழ்கள் வழங்குவது போன்றவற்றில் விரைவான செயல்பாடுகள் வேண்டும்.

‘மக்களிடம் செல்; மக்களுடன் வாழ்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்’’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதுதான் நமது தாரகமந்திரம். அதற்கேற்ப அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.

மக்கள் மனுக்களைக் கொண்டு வரும்போது இது சாத்தியம் என்றோ, சாத்தியம் இல்லையென்றால் சரியான காரணங்களுடன் மக்களிடம் தெளிவுப்படச் சொன்னாலே அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். அரசின் சேவைகள் அவர்கள் வீட்டுக்கே போய்ச்சேர வேண்டும். அதற்கு உங்களுடைய ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

வெளிப்படைத்தன்மையே அடிப்படை கொள்கை. அதனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு இருக்காது.

சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கல்வித்துறை கண்காணிக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவில் தாமதம் ஏற்படுவதைச் சகிக்கவே கூடாது.

மாநிலத்தின் சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து அதிகளவில் பதிவாகின்றன. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் இலக்கு கொண்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை அமலாக்கம் மட்டுமே தீர்க்க முடியாது - போதைப்பொருள் தேவை குறைப்புக்கும் ( Drug Demand to be eliminated) சம கவனம் செலுத்தப்பட வேண்டும்.

காவிரி, வைகை மற்றும் பிற ஆற்று மணல் படுகைகளில் சட்டவிரோத மணல் திருட்டை கண்டறிந்து சுரங்க, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து, சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

ரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.

தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் உரிய கால இடைவெளியில் தணிக்கை செய்ய பொறுப்பேற்கப்பட வேண்டும்.

உரிமம் இல்லாமல் எந்த அலகும் இயங்கவே கூடாது. ஒடிசா, மேற்குவங்கம், பிகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். புலம்பெயர்ந்தோர், தாக்குதல் அல்லது சுரண்டலுக்கு உட்படுத்தப்படக் கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்காகத் தொழிலாளர் நலத்துறை மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கட்டாயப் பதிவு அமல்படுத்தப்பட வேண்டும்.

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். காவல்துறை ஆணையர் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொலை, போக்சோ மற்றும் பிற முக்கியமான வழக்குகள் தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்களுடனும் மாதந்தோறும் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்த வேண்டும். முந்தைய மாதத்திற்கான முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து ஆவணப்படுத்தப்பட வேண்டும் இது மூத்த காவல் அதிகாரிகளால் உறுதி செய்யப்பட வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What Anna said is the TVK mantra Vijay's instruction to district secretaries

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.