அமைச்சர் சரத்குமார் விவகாரத்தில் முதல்வர் இதுவரை வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என திமுக முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு அரசுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இன்று திட்டமிடப்பட்டிருந்தது. இன்று காலை ஆர்ப்பாட்டத்துக்காக மேடை அமைக்கும் பொழுது முறையாக அனுமதி பெறவில்லை எனக்கூறி அவர்களை போலீஸார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
இந்த நிலையில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மா. சுப்பிரமணியன் தலைமையில் ராஜரத்தினம் மைதானம் அருகே தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முறையாக அனுமதி கேட்டு இருந்தோம். கடந்த திமுக ஆட்சியில் போராட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்டு வந்தால் முறையாக போராட்டம் நடத்துவதற்கான அனுமதி என்பது கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் எழும்பூர் அருகே இன்று திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. போலீஸார் அனுமதியை முறையாக தராமல் காலையிலேயே கைது செய்துள்ளனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் வந்து கொண்டுள்ள நிலையில், இதற்கு முறையாக அனுமதி தராமல் போலீஸார் அதனை தடுக்கின்றனர். கடந்த ஒன்றரை மாதத்தில் தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பது முற்றிலுமாக சீர் குலைந்து கேள்விக்குறியாகி உள்ளது.
குடிநீர், மின்சாரம் போன்ற பல்வேறு பிரச்னைகளை தமிழ்நாட்டில் மக்கள் சந்தித்து வரும் வேளையில் மறைந்த பாக்யராஜ் உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் இருக்கும் சூழலில் சுமார் 4 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருக்கும் நிலையே இருந்தது.
திமுக ஆட்சியில் 80 லட்சம் மாணவர்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு சீர்படுத்தினோம். ஆனால் தவெக ஆட்சியில் அது முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.
அண்மையில் சேப்பாக்கம் மைதானத்தில் தவெக அமைச்சர் சரத்குமார் செய்த போதைப் பொருள் தொடர்பான செயல் என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சரத்குமார் விடியோ வெளியானது. எதற்கு டெபிட் கார்டு? எதற்கு 500 ரூபாய் ? இது லேமினேஷன் செய்யப்பட்டவை என்பதால் அந்த உயர்ரக போதை பொருள் இதில் ஒட்டாது.
அதனால் தான் இவை பயன்படுத்தப்பட்டது. புத்திசாலி தனமான போதைப்பொருளை உபயோகிப்பவர்கள் இப்படிதான் செய்வார்கள். அதைத்தான் அமைச்சரும் செய்திருக்கிறார்.
குழந்தைக்கு மாத்திரை கொடுக்கத்தான் அப்படி செய்தேன் என அமைச்சர் விளக்கம் கூறுகிறார். எந்த 5 வயது குழந்தைக்கும் மருத்துவர் மாத்திரை தருவதில்லை. அவரின் சமூகவலைதளங்களில் இருந்தே அந்த விடியோ வெளியாகி இருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க தொடர் பொய்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் விழிப்புணர்வு நடத்துகிறோம் என்ற பெயரில் மாரத்தான் நடத்திய அடுத்த நாளே உயர்ரக போதைப்பொருளை பொதுவெளியில் வைத்து அமைச்சர் நசுக்குவது போன்ற ரீல்ஸ் வந்துள்ளது.
உடனடியாக முதல்வர் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அது அவரின் ஜனநாயக கடமை. முதல்வர் தற்போது வரை இது குறித்து பதில் சொல்லவும் இல்லை. அமைச்சரின் மேல் எந்தவித சட்ட நடவடிக்கையையும் எடுக்கவும் இல்லை. அவரை குறைந்தபட்சம் பதவியில் இருந்து கூட நீக்க வில்லை. பொய்யான பொருந்தாத காரணங்களை இந்த அமைச்சர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
அநாகரிக செயலில் ஈடுபடும் அமைச்சரை குறைந்தபட்சம் பதவி நீக்கம் செய்ய வேண்டியது முதல்வரின் கடமை. முதல்வர் அதை செய்ய வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரை கண்டிக்க வேண்டும்.
இன்றைக்கு இதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதி கூறிய நிலையில் தீவிரவாதிகளை அடக்குவது போல மேடை போடுவதை தடுத்து இருக்கிறார்கள். மேடை போட வந்தவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இது போன்று தொடர் சம்பவங்கள் தொடரும் என்றால் எங்களுடைய தலைமை அறிவுறுத்தலின் பேரில் தொடர் போராட்டங்களை அறிவிப்போம் என்றும் கூறினார்.
Summary
Former DMK Minister Ma. Subramanian has questioned why the Chief Minister has remained silent so far regarding the Minister Sarathkumar issue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











