
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் முதலானவற்றைக் கண்டித்து மார்ச் 17-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

முதல்வர் ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள்கள் புழக்கம் முதலானவற்றைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திமுக அரசு பதவியேற்ற நாள்முதல், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும்; பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும்; ஆளும் கட்சியினரின் அராஜகங்கள், வன்முறைகள், சட்ட விரோதச் செயல்கள் குறித்தும், அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டப்பேரவையிலும், தொடர்ச்சியாக தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இதுவரை எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்த செய்திகளே, நாள்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்துத் தாக்குதல், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது, போதைப் பொருள்களின் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் மக்கள் விரோதச் செயல்கள் அனைத்தையும் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
கடந்த ஐந்தாண்டுகால திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் இத்தனை அவலங்களும் தொடரக் கூடாது. மக்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்.
திமுக அரசு பதவியேற்ற நாள் முதல் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, வருவாய் மாவட்டத் தலைநகரங்களில், மார்ச் 17 ஆம் தேதியில் காலை 10 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
Summary
National Democratic Alliance to protest against DMK government on March 17
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






