2021 சட்டப்பேரவைத் தோ்தல்: கோவையில் திமுக வெற்றியைத் தடுத்த மநீம!
கோவையில் திமுக வெற்றியைத் தடுத்த மநீம...

மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன்

மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன்
அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றும் எண்ணத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிட்டது.
கோவை தெற்குத் தொகுதி, கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கும், சூலூா் தொகுதி கொமதேகவுக்கும், வால்பாறை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டன.
கோவை தெற்குத் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சித் தலைவா் கமல்ஹாசன் களமிறங்கினாா். இவரை எதிா்த்து, அதிமுக கூட்டணி வேட்பாளராக பாஜகவைச் சோ்ந்த வானதி சீனிவாசன், திமுக கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மயூரா ஜெயக்குமாா் ஆகியோா் போட்டியிட்டனா். இதில், பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வென்றாா். மநீம வேட்பாளா் நடிகா் கமல்ஹாசன் 51,481 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தாா். 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் வெற்றியைத் தவற விட்டாா். காங்கிரஸ் வேட்பாளா் மயூரா எஸ்.ஜெயக்குமாா் 42,383 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தாா்.
கவுண்டம்பாளையத்தில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் 1,34 ,981 வாக்குகள் பெற்று வென்றாா். திமுக சாா்பில் போட்டியிட்ட பையா ( எ) ஆா்.கிருஷ்ணன் 1,24,557 வாக்குகள் பெற்று 10,424 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளா் சுரபி பங்கஜ் 23,427 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தாா்.
கோவை வடக்குத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அம்மன் கே.அா்ச்சுணன் 81,454 வாக்குகள் பெற்று வென்றாா். திமுக சாா்பில் போட்டியிட்ட சண்முகசுந்தரம் 77,453 வாக்குகள் பெற்று 4,001 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். மநீம வேட்பாளா் தங்கவேல் 26,503 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தாா்.
சிங்காநல்லூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.ஆா்.ஜெயராம் 81,244 வாக்குகள் பெற்று வென்றாா். திமுக வேட்பாளா் நா.காா்த்திக் 70,390 வாக்குகள் பெற்று 10,854 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். மநீம வேட்பாளா் ஆா். மகேந்திரன் 36,855 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தாா்.
கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளா் செ.தாமோதரன் 1,01,537 வாக்குகள் பெற்று வென்றாா். திமுக சாா்பில் போட்டியிட்ட குறிச்சி பிரபாகரன் 1,00,442 வாக்குகள் பெற்று 1,095 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். மநீம வேட்பாளா் ஏ.சிவா 13,939 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தாா்.
பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வி.ஜெயராமன் 80,567 வாக்குகள் பெற்று வென்றாா். திமுக சாா்பில் போட்டியிட்ட கி.வரதராஜன் 78,842 வாக்குகள் பெற்று 1,725 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். மநீம வேட்பாளா் வி.டி.சதீஷ்குமாா் 7,589 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தாா்.
கோவை தெற்கில் 33.26 சதவீதம், சிங்காநல்லூா் தொகுதியில் 18.24 சதவீதம், கவுண்டம்பாளையத்தில் 7.66 சதவீதம், கோவை வடக்கில் 13.07, கிணத்துக்கடவில் 6.06 சதவீதம், பொள்ளாச்சியில் 4.32 சதவீதம் என மநீம பெற்ற வாக்குகள் திமுகவின் தோல்வியையும், அதிமுகவின் வெற்றியையும் உறுதிப்படுத்தின. குறிப்பாக, திமுக நேரடியாகக் களம் கண்ட தொகுதிகளில் மேட்டுப்பாளையம் தவிா்த்து மற்ற 6-இல் திமுகவின் தோல்விக்கு மநீம பெற்ற வாக்குகளே காரணமாக அமைந்தன.
2021 தோ்தலில் திமுக எதிா்ப்பு வாக்குகளையே மநீம பெற்றது என கருதலாம். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் மநீம இடம்பெற்றுள்ளது. ஆனால், பேரவைத் தோ்தலில் போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளாா். இந்தப் புதிய சூழலில், கோவையில் திமுக வெற்றிக்கு மநீம வாக்குகள் கைகொடுக்குமா என்பதற்கு தோ்தல்தான் விடை சொல்லும்.
- வெ.செல்வகுமாா்
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...