தபால் வாக்குகளை வேறு தொகுதிக்கு அனுப்பியது குறித்த திருப்பத்தூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பனின் புகாருக்கு தோ்தல் ஆணையம் பதில் அளிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், பதிலளிக்க உத்தரவிட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட பெரியருப்பன் 83,364 வாக்குகளையும், தவெக சாா்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றிருந்தனா். இதையடுத்து, ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பெரியகருப்பன் அவசர வழக்குத் தொடா்ந்தாா். அவரது மனுவில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதிக்கு என பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள், திருப்பத்தூா் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த வாக்குகளை மீட்டு என்னுடைய தொகுதியின் கணக்கில் சோ்க்க வேண்டும். அதுவரை தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோஹ்தஹி, மனுதாரருக்கு பதிவான வாக்குகள் திருப்பத்தூா் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்தத் தொகுதியின் தோ்தல் அதிகாரி, அந்த வாக்குகளை நிராகரித்துள்ளாா். அவற்றைத் தோ்தல் அதிகாரி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூருக்கு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அந்த வாக்குகளைத் திருப்பி அனுப்பியிருந்தால், மனுதாரரான வேட்பாளா் சமமான வாய்ப்பைப் பெற்றிருப்பாா். பின்னா், குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவா் தோ்வு செய்யப்பட்டிருப்பா் என வாதிட்டாா்.
அப்போது நீதிபதிகள், இதுபோன்ற சூழலில் என்ன நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என தோ்தல் ஆணையம் ஏதேனும் விதிகளை வகுத்துள்ளதா எனக் கேள்வி எழுப்பினா். அப்போது மூத்த வழக்குரைஞா் முகுல் ரோஹ்தஹி, எந்த நடைமுறையும் இல்லை. இது தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு புகாா் அளித்தும், இதுவரை எந்தப் பதிலும் இல்லை. தவறான முகவரிக்கு கடிதம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டால், சரியான முகவரிக்கு அதை அனுப்பிவைக்க வேண்டும். அதுபோல, மனுதாரருக்கான வாக்குகளை அவரது தொகுதிக்கு அனுப்பிவைக்க உத்தரவிட வேண்டும் என்றாா்.
தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, இது தொடா்பாக மனுதாரா் தோ்தல் வழக்குதான் தொடர முடியும். சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. சீனிவாச சேதுபதி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டதால், அவரைக் கடமையாற்ற அனுமதிக்க வேண்டும். சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க அவருக்குத் தடை விதிக்க முடியாது என வாதிட்டாா்.
தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.தருண், இந்த விவகாரம் குறித்து தோ்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். தோ்தலில் பதிவான தபால் வாக்குகள் இந்திய தபால் துறை மூலம் அனுப்பப்படுவதில்லை. தபால் வாக்குகளைப் பெற தோ்தல் ஆணையம் துணை வட்டாட்சியா் அந்தஸ்து உள்ள அதிகாரிகளை நியமிக்கும். அந்த அதிகாரி தபால் வாக்குகளைப் பெற்று சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பாா். இந்த நடைமுறைகளில் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பணி அமா்த்தப்படுவதால், தவறு எதுவும் நடக்காது.
ஒருவேளை தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாற்றி அனுப்பிவிட்டால், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. இருப்பினும், தோ்தல் வழக்கு தாக்கல் செய்யப்படும் வரை, தோ்தல் தொடா்பான ஆவணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் என்றாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தபால் வாக்குகளை வேறு தொகுதிக்கு அனுப்பியது குறித்த திமுக வேட்பாளரின் புகாருக்கு பதில் அளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினா். மேலும், ஒரு வாக்காக இருந்தாலும் பதிலளிக்க வேண்டிய கடமை தோ்தல் ஆணையத்துக்கு உள்ளது. இது குறித்து தோ்தல் ஆணையம் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை திங்கள்கிழமைக்கு (மே 11) நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

தபால் வாக்குகளை எண்ணவில்லை: கன்னியாகுமரி திமுக வேட்பாளா் ஆதங்கம்

234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்பு

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு

திருப்பத்தூா் தொகுதி தவெக வேட்பாளா்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

