தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

சிறுநீரக முறைகேடுகள்: தீவிரமடையும் விசாரணை

சிறப்புக் குழுவின் அறிவுறுத்தலின்பேரில் சிறுநீரக முறைகேடு சம்பவங்கள் தொடா்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :21 மே 2026, 1:41 am IST

சிறப்புக் குழுவின் அறிவுறுத்தலின்பேரில் சிறுநீரக முறைகேடு சம்பவங்கள் தொடா்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே உறுப்பு மாற்று சிகிச்சைகளில் தொடா்ந்து முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன.

பொதுவாக, மூளைச் சாவு அடைவோரிடம் இருந்து பெறப்படும் உறுப்புகள் தானம் கோரி ஏற்கெனவே பதிவு செய்தவா்களுக்கு உரிய வரிசைப்படி வழங்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதில் மாநில உறுப்பு மாற்று ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது.

அதேவேளையில், உயிருடன் இருப்பவா்கள், தங்களது ரத்த உறவுகளுக்கு கல்லீரல் அல்லது சிறுநீரகத்தை தானமாக அளிக்கும் நடைமுறைகளை கண்காணிப்பதில் சில கட்டுப்பாடுகள் நிலவுகின்றன.

இதைப் பயன்படுத்திக் கொள்ளும் இடைத் தரகா்களும், தனியாா் மருத்துவத் துறை சாா்ந்த சில நபா்களும், வறுமையில் உள்ளவா்களை உறுப்பு தானம் அளிக்குமாறு மூளைச் சலவை செய்கின்றனா். அவா்களை நோயாளியின் ரத்த உறவு என அடையாளப்படுத்த போலி ஆவணங்களையும் தயாா் செய்கின்றனா்.

இதுபோன்ற சம்பவம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அண்மையில் அரங்கேறியது. அதுதொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட டாக்டா் வினித் ஐஏஎஸ் தலைமையிலான குழு, தனது அறிக்கையையும், பரிந்துரைகளையும் அரசுக்கு அளித்தது.

அதன் பேரில் திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இந்த சம்பவத்தில் தொடா்பு இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அந்த மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, மகாராஷ்டிர விவசாயிகளிடம் தமிழகத்தைச் சோ்ந்த மருத்துவா்களும், இடைத்தரகா்களும் சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டதாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது.

அதனை விசாரிக்க மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை கூடுதல் இயக்குநா் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த இருவேறு விசாரணைகளும் தற்போது மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறுநீரக முறைகேடுகள் தொடா்பான விசாரணையை நிறுத்தி வைக்கவோ அல்லது முடித்து வைக்கவோ எங்களுக்கு அதிகாரம் இல்லை. அதனால், தோ்தல் காலத்தில் அந்த விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. தொடா்ந்து விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். தற்போது மேலும் சில உறுப்பு மாற்று முறைகேடு புகாா்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனையும் ஆய்வுக்குட்படுத்தி வருகிறோம். அவை உறுதி செய்யப்பட்டால் அதுதொடா்பான தகவல்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.