தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள கோயில் நிதி பாதுகாப்பாக உள்ளது. இந்த நிதிக்கு அரசு பொறுப்பேற்பதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆலயம் காப்போம் அமைப்பின் தலைவா் டி.ஆா்.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், தமிழக கோயில்களின் உபரி நிதியை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து வளா்ச்சி நிதிக் கழகத்தில் முதலீடு செய்யும் வகையில் அறநிலையத் தறை சட்டத்தின் முதலீட்டு விதிகளில் திருத்தம் செய்து அறநிலையத் துறை கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பித்தது.
கோயில் சொத்துகளையும், நிதியையும் பாதுகாக்கும் நோக்கில்தான் அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்துக்குப் புறம்பாக கோயில் நிதியை அரசின் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை விதிக்க வேண்டும். அறநிலையத் துறை பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரா் தரப்பில், தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2,700 கோடியை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை பெறுவதற்கு இந்த நிதி நிறுவனத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த முதலீட்டைப் பெற ரிசா்வ் வங்கியிடம் முறையான அனுமதியையும் பெறவில்லை. இந்த நிதி நிறுவனம் தரவரிசையில் மோசமான நிலையில் உள்ளதாக வாதிடப்பட்டது.
தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் தரப்பில், எங்களது நிதி நிறுவனம் இதுவரை எவ்வித நிதி நெருக்கடியையும் சந்திக்காமல், சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எங்களது நிறுவனத்திடம் முதலீடு பெற்றுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வட்டித் தொகையை பாக்கி வைக்காமல் மாதந்தோறும் முறையாகச் செலுத்தி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோயில் உபரி நிதியை இனி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யக் கூடாது என அனைத்து கோயில் செயல் அலுவலருக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் சுற்றறிக்கை அனுப்ப முடியுமா? இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள கோயில் நிதிக்கு பொறுப்பேற்று உத்தரவாதம் அளிக்க தமிழக அரசு முன்வருமா? எனக் கேள்வி எழுப்பியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள கோயில் நிதி பாதுகாக்கப்படும். அதற்கு அரசு பொறுப்பு என உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகளுக்கு முறையாக வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, முதலீடு பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.







