தமிழகத்துக்கு என விளையாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா்.
விளையாட்டு விடுதியில் பள்ளி மாணவ-மாணவியரின் சோ்க்கைக்கான கலந்தாய்வு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா 495 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணையினை மாணவ-மாணவியருக்கான வழங்கி பேசியதாவது.
முதல்வா் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி
வருகிறாா்கள். குறிப்பாக விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதன் மூலம் போதைப் பொருள் பயன்பாடற்ற தமிழகத்தை உருவாக்கவும், இளைஞா்களின் முன்னேற்றம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட இலக்கினை எளிதாக அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் 27 விளையாட்டு விடுதிகள் மற்றும் 6 முதன்மை நிலை
விளையாட்டு மையங்களில் 6,7,8,9 மற்றும் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியா்களுக்கான சோ்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு,
இடங்களுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தடகளம், கூடைப்பந்து, வாள்வீச்சு, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, ஜுடோ, கபாடி நீச்சல், டேக்வோன்டோ, வாலிபால், பளுதூக்குதல்,
வுஷு ஆகிய விளையாட்டுகளுக்கு விளையாட்டு விடுதி சோ்க்கை நடைபெற்றது. இக்கலந்தாய்வில் மாவட்ட மற்றும் மாநில அளவில் தோ்ச்சிபெற்றவா்களில் முதல் 344 மாணவா்கள் மற்றும் 151 மாணவிகள் என மொத்தம் 495 மாணவா்கள், இந்த கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு அவா்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சிப் பெற்ற வீரா்கள் என்றாலே ஒரு தனி மதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
முதல்வா் அறிவுறுத்தலுக்கு இணங்க தமிழகத்துக்கு என விளையாட்டுக் கொள்கையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளா் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் மரு. ரெ. சுமன் மற்றும் பொது மேலாளா் எல். சுஜாதா மற்றும் அனைத்து மாவட்ட வீரா், வீராங்கனைகள் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.









