புத்தக முறைகேட்டை அம்பலப்படுத்திய பெருமாள் முருகனே நூல் பரிந்துரைக் குழுவில் இருந்தவர்தான்!- கோவி. செழியன்
கோவை பெரியார் அறிவுலக விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் அளித்துள்ள விளக்கம் பற்றி....

கோவி. செழியன் - கோப்புப் படம்
புத்தக முறைகேட்டை வெளிகொண்டுவந்த கட்டுரையை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனும் நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்தான் என்று திமுக முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்கள் தவறான தகவல்களையும் - பிழையான வரலாற்றையும் உள்ளடக்கியதாக இருப்பதையும், அப்புத்தகங்களின் வெளியீட்டாளர்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களின் பெயர் மற்றும் முகவரிகள் போலியாக இருப்பதையும் எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார்.
இதை தங்களது அரசியல் அருவெறுப்புக்கு பயன்படுத்தப் பார்க்கிறது த.வெ.க.
எதற்கெடுத்தாலும் தி.மு.க.வைக் குற்றம் சொல்லியே பழக்கப்பட்ட த.வெ.க. அரசைச் சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் - தி.மு.க. மீது புழுதி வாரி இறைப்பதற்கென்றே செயல்படும் அக்கட்சியின் “Virtual Abusers” கூட்டமும், வழக்கம்போல் பழியைத் தூக்கி தி.மு.க. மீது போட்டுவிடலாம் என்று செயல்பட்டனர்.
இதில் அதிர்ச்சியான ஆச்சர்யம் என்ன என்றால், இதுவரை சட்டம்-ஒழுங்கு, விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட எந்தப் பிரச்னைக்கும் வாய்த்திறக்காத முதல்வரும் அதிசயமாய் அறிக்கை வெளியிட்டுள்ளார்; மக்களைத் திசைத்திருப்ப இது பயன்படும் என்ற நப்பாசையால்!
முதல்வர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, நொடிப்பொழுதில் அரசின் அத்தனை ஆவணங்களையும் ஆய்வு செய்யும் அதிகாரத்தையும் கொண்டுள்ள விஜய், பெரியார் அறிவுலகப் புத்தகங்கள் வாங்கியது தொடர்பான சர்ச்சை வெளியானதும் அது குறித்து முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும். அதை அவர் பொறுப்புடன் செய்ததாகத் தெரியவில்லை.
நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்கள் தரமானவையாக இருக்க வேண்டும் - அவற்றில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என, “வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கையை” முதலில் உருவாக்கியதே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை மறைத்துவிட்டு த.வெ.க.வினர் பரப்புவது அவதூறு மட்டுமே.
கோவையில் அமையவுள்ள மாபெரும் நூலகத்தில் தரமான நூல்கள் இடபெற வேண்டும் என மதிப்புமிக்க எழுத்தாளர்களையும் - கல்வியாளர்களையும் உள்ளடக்கிய நூல் பரிந்துரைக் குழுவினை கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைத்தோம். புத்தக முறைகேட்டை வெளிகொண்டுவந்த கட்டுரையை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனே, அந்த நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்தான்.
தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான நூலகங்களை உருவாக்கி, இந்திய ஒன்றியமே வியந்து பார்க்கும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட நூலகங்களை அமைத்த தி.மு.க.வின் திட்டங்களில் இதற்குமுன் இப்படிப்பட்ட குறைகள் ஏதாவது எழுந்துள்ளனவா?
ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தி.மு.க.வின் திட்டங்களைச் சிதைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் த.வெ.க. ஆட்சியில் இத்தகைய செய்தி வந்திருப்பதால், இதில் உள்நோக்கம் ஏதும் உள்ளதோ, சதிச் செயல்கள் ஏதும் உள்ளனவோ என்று கருத வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட புத்தகங்கள், அதனை எழுதிய எழுத்தாளர்கள், அனுமதி பெற்ற பதிப்பகங்கள் ஆகியவற்றின் பின்னணி வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.
எனவே, வழக்கம் போல் தி.மு.க. தி.மு.க. என்று சொல்லாமல், சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை அவசியம் என்பதே தி.மு.கழகத்தின் நிலைப்பாடு! என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் திமுக ஆட்சியில் கட்டப்பட்டு, கடந்த மாதம் முதல்வர் ச. ஜோசப் விஜய்யால் திறந்துவைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்களில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Summary
Former DMK Minister Govi. Chezhian stated that writer Perumal Murugan, who authored the article exposing the book irregularities, was himself a member of the book recommendation committee.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


