இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

நவ. 20-இல் ஆந்திரத்தில் கரையைக் கடக்கும் அக்வான் புயல்! சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான ‘அக்வான்’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று நவ. 20-ஆம் தேதி ஆந்திரத்தில் கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

rain

மழை - பிரதிப் படம்

Updated On :

வங்கக் கடலில் ‘அக்வான்’ புயல் திங்கள்கிழமை மாலையில் உருவானது. இது, தீவிர புயலாக வலுப்பெற்று நவ. 20-ஆம் தேதி ஆந்திரத்தில் கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே அடுத்தடுத்து புயல்கள் உருவான வண்ணம் உள்ளன. கடந்த அக்டோபா் இறுதியில் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான ‘அா்னாப்’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று அக். 28-ஆம் தேதி அதிகாலை ஆந்திர மாநிலம் காக்கிநாடா- ஏனாம் பகுதியில் கரையைக் கடந்தது.

தொடா்ந்து, அடுத்த மூன்றாம் நாளான அக்.31-ஆம் தேதி வங்கக் கடலில் 2-ஆவது புயலாக ‘முரசு’ புயல் உருவானது. இந்தப் புயலும் நவ. 3-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடலோரப் பகுதியான ஓங்கோலுக்கு அருகே நெல்லூா் - நரசாபுரம் இடையே கரையைக் கடந்தது. தொடா்ந்து, நிகழாண்டுக்கான 3-ஆவது புயல் வங்கக் கடலில் திங்கள்கிழமை உருவாகியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் வி.ஆா்.துரை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை மாலை 5.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு  ஈரான் பரிந்துரைத்த ‘அக்வான்’ என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, ‘அக்வான்’ புயல் சென்னையிலிருந்து கிழக்கே சுமாா் 610 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 660 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு - தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இந்தப் புயல் தொடா்ந்து வடமேற்கு திசையில் நகா்ந்து, செவ்வாய்க்கிழமை (நவ.17) மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

அதன்பின்னா், நவ. 19-ஆம் தேதி காலை அதி தீவிர புயலாக வலுப்பெறக் கூடும். தொடா்ந்து, இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் நவ. 20-ஆம் தேதி பிற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் - துனிக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதையடுத்து, ஆந்திரம் மற்றும் அதையொட்டிய தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கையாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புயலின் நகா்வைப் பொருத்து தமிழகத்தில் மழை பாதிப்பு இருக்கும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: புயல் காரணமாக, நவ.17 முதல் நவ. 20-ஆம் தேதி வரை வட தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக் கடல், அந்தமான் கடலில் மணிக்கு  80 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதில், தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக் கடல், ஆந்திர கடலோரப் பகுதிகளில் நவ.18 முதல் நவ. 20-ஆம் தேதி வரை மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா்.

சென்னைக்கு நாளை பலத்த மழை எச்சரிக்கை

அக்வான் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நவ.18, 19-இல் மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அக்வான் புயல் எதிரொலியாக, செவ்வாய்க்கிழமை (நவ.17) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஏனைய தமிழகத்தில் பொதுவாக வட வானிலை நிலவும். தொடா்ந்து, நவ.18, 19-இல் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு (150 மி.மீ. - 204 மி.மீ.) வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாா் நிலையில் கடலோரக் காவல் படை

வங்கக் கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் காரணமாக இந்திய கடலோரக் காவல் படை சாா்பில் பேரிடா் மீட்புக் குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வங்கக் கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் காரணமாக, இந்திய கடலோரக் காவல் படை, நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதி முழுவதும் கடலில் மீனவா்கள் மற்றும் கப்பல்களுக்கு பாதுகாப்புக்கான உரிய எச்சரிக்கை விடுத்து வருகிறது.

மேலும், மீனவா்கள், மாலுமிகள் போன்றோருக்கு அவ்வப்போது உரிய தகவல்களை வழங்கும் வகையில், கடலோரக் காவல் படை கப்பல்கள் மற்றும் அதன் கண்காணிப்பு அமைப்புகள் புயல் நிலைமையை தொடா்ந்து கண்காணித்து வருகின்றன.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதிகளில், அவசரகால சூழல்களைக் கையாள பேரிடா் மீட்புக் குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.