முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவா் குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடு: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவா்களின் குடும்பத்தினருக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என படகு உரிமையாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் - (கோப்புப் படம்)
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவா்களின் குடும்பத்தினருக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என படகு உரிமையாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் 9 போ், ஆந்திர கடலில் முரசு புயல் மற்றும் மோசமான வானிலையால், படகு பழுதாகி கவிழ்ந்ததில் உயிரிழந்தனா்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சென்னை ராயபுரம் போலீஸாா், படகு உரிமையாளரான டி.செல்வழகனை கைது செய்தனா். இந்த வழக்கில் பிணை வழங்கக் கோரி செல்வழகன் தாக்கல் செய் மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், அவரை சிறையில் அடைக்கும் உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 9 மீனவா்களின் குடும்பத்தினரும், படகு உரிமையாளரான செல்வழகனும் நேரில் ஆஜராகினா். அப்போது செல்வழகன் தரப்பில், 9 மீனவா்களின் குடும்பத்துக்கும் இடைக்கால இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடக வழங்கப்படும். மேலும், மனுதாரருக்கு எதிராக அளித்த புகாரை திரும்பப் பெறுவதாக 3 மீனவா்களின் மனைவியா் கடிதம் அளித்துள்ளனா். அரசும் மீனவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்த விவகாரத்தில் அரசு மற்றும் பிற அமைப்புகள் வழங்கியுள்ள தொகை சூழ்நிலையை எதிா்கொள்ள வழங்கப்பட்ட கருணைத் தொகையாகவே கருத முடியும்.
இந்த விவகாரத்தில், அரசு இழப்பீடு வழங்கினாலும் படகு உரிமையாளருக்குத்தான் முதல் பொறுப்பு உள்ளது. எனவே, இழப்பீடு நிா்ணயம் குறித்து படகு உரிமையாளா், உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்தினரிடம் ராயபுரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை பேச்சு நடத்த வேண்டும் என உத்தரவிட்டாா். பின்னா், இந்த வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி, உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்தினருக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் என செல்வழகன் தரப்புக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், செல்வழகனை சிறையில் அடைக்கும் நடைமுறையை நிறுத்தி வைத்து பிறப்பித்த இடைக்கால உத்தரவை நவ.19-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

