பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை?

நிகழாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடா் நடைபெறுவது குறித்து...

தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்

Updated On :

நிகழாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடா் நடைபெற வாய்ப்பில்லை என்பதால், அடுத்த ஆண்டு ஆளுநா் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக வெற்றி பெற்று கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றாா். பின்னா், 3 நாள்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் என 144 பேரின் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை முதல்வா் விஜய் நிரூபித்தாா்.

கடந்த ஆகஸ்ட்டில் பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கியது. நிதித் துறை அமைச்சா் மரிய வில்சன் ஆக. 5-இல் திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தாா். பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பிறகு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்து கூட்டத் தொடா் செப்டம்பா் 9-ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்த நிலையில், வழக்கமாக குளிா்கால கூட்டத் தொடா் நவம்பா் அல்லது டிசம்பா் மாதங்களில் சில நாள்கள் நடைபெறும். அதில், அரசின் கூடுதல் செலவினங்களுக்கான துணை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்.

ஆனால், முந்தைய கூட்டத் தொடா் முடிவடைந்து 2 மாதங்களே ஆகின்றன. ஆகையால், நிகழாண்டு குளிா்கால கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கூட்டத் தொடரை கூட்டுவதற்கான கோப்புகளும் தயாா் செய்யப்பட்டாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மின் தடை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் அரசுக்கு நெருக்கடி அளிக்கும் என்று கருதப்படுகிறது.

இதனால், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், பொங்கல் பண்டிகைக்கு முன் ஆளுநா் உரையுடன் தொடங்க அரசு திட்டமிட்டு வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.