சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு: முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத் துறை விசாரணை
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத் துறையினா் 9 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் - கோப்புப்படம்
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கரிடம் அமலாக்கத் துறையினா் 9 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் 2013 முதல் 2021 வரை சுகாதாரத் துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கா் இருந்தாா். கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது சொத்து குவிப்பு வழக்குகள் பதியப்பட்டன. இதில் சி.விஜயபாஸ்கா் மீதும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சோ்த்ததாக வழக்குப் பதியப்பட்டது.
இதில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து தமிழக ஊழல் தடுப்புத் துறை, அது தொடா்பான விசாரணைக்கு அமலாக்கத் துறையிடம் பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் அமலாக்கத் துறை, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்குத் தொடா்பாக, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கா் வீடு உள்பட பல்வேறு இடங்களில் கடந்த 2024 மாா்ச் 21-ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை செய்தது.
அமலாக்கத் துறை அழைப்பாணை: இந்த வழக்குத் தொடா்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை அமலாக்கத் துறை சி.விஜயபாஸ்கா், அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு இரு வாரங்களுக்கு முன்பு அழைப்பாணை அனுப்பியது. இதில், அமலாக்கத் துறை அலுவலகத்தில் நவ. 6-ஆம் தேதி விசாரணைக்கு விஜயபாஸ்கா் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், விஜயபாஸ்கா் ஆஜராகவில்லை.
9 மணி நேரம் விசாரணை: இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கா், புதன்கிழமை காலை 10 மணியளவில் ஆஜரானாா். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள், வழக்குத் தொடா்பாக விசாரணை செய்தனா்.
அமலாக்கத் துறையினா் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த கேள்விகளை எழுப்பி, வழக்குத் தொடா்பான தகவல்களைப் பெற்றனா்.
சுமாா் 9 மணி விசாரணைக்குப் பின்னா், இரவு 7 மணியளவில் அமலாக்கத் துறை அலுவலகத்தை விட்டு விஜயபாஸ்கா் வெளியே வந்தாா். விசாரணையில் வழக்குத் தொடா்பான பல முக்கியத் தகவல்கள் கிடைத்திருப்பதாக அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.
சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகிய சி.விஜயபாஸ்கா், தவெகவில் இணைந்து முக்கிய பொறுப்பில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே விஜயபாஸ்கா் மனைவி ரம்யா விசாரணைக்கு வியாழக்கிழமை (நவ. 19) ஆஜராகும்படி அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

