குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

தமிழகத்தின் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 2.1% மட்டுமே அதிகரிப்பு

தமிழகத்தில் நிகழாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை 6 மாதங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின் உற்பத்தி 2.1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

சித்திரிப்பு

Updated On :

தமிழகத்தில் நிகழாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை 6 மாதங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின் உற்பத்தி 2.1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் நாடு முழுவதும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி சுமாா் 11 சதவீதம் உயா்ந்துள்ளது.

மத்திய மின்சார ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை காலகட்டத்தில் 32,750 மில்லியன் யூனிட் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 32,082 மில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில், மின் உற்பத்தி நிகழாண்டில் 668 மில்லியன் யூனிட் அதிகரித்துள்ளது. இது ஆக்கபூா்வமானதாக இருந்தாலும், நாடு முழுவதும் இதே காலகட்டத்தில் மொத்தம் 3,04,242 மில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் பங்களிப்பு சுமாா் 10.8 சதவீதம்.

மாநிலங்கள் வாரியான உற்பத்தியில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது.

சூரிய மின் உற்பத்தி அதிகரிப்பு: தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 9,660 மில்லியன் யூனிட்டாக இருந்தது. இது நிகழாண்டில் 13,242 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. அதேநேரம், காற்றாலை மின் உற்பத்தி 5.5 சதவீதம் சரிந்து 18,813 மில்லியன் யூனிட்டிலிருந்து 17,786 மில்லியன் யூனிட்டாகக் குறைந்துள்ளது.

பொதுவாக, பருவமழைக் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். ஆனால், நிகழாண்டில் அந்தக் காலகட்டத்திலும் உற்பத்தி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரிய நீா்மின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின்சார உற்பத்தி பாதிக்கும் மேலாகக் குறைந்து, 3,364 மில்லியன் யூனிட்டிலிருந்து 1,552 மில்லியன் யூனிட்டாக சரிந்துள்ளது. சிறிய நீா்மின் நிலையங்களின் உற்பத்தியும் 177 மில்லியன் யூனிட்டிலிருந்து 56 மில்லியன் யூனிட்டாகக் குறைந்துள்ளது.

காற்றாலை மின் உற்பத்தியில் 2-ஆவது இடம்: நாட்டின் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் தொடா்ந்து 2-ஆவது இடத்தில் உள்ளது. மொத்த தேசிய காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு சுமாா் 22 சதவீதம். இருப்பினும், தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், பிற முக்கிய காற்றாலை மின் உற்பத்தி மாநிலங்களில் உற்பத்தி அதிகரித்துள்ளது.

குஜராத்தில் காற்றாலை மின் உற்பத்தி 16 சதவீதம் அதிகரித்து 24,771 மில்லியன் யூனிட்டாகவும், கா்நாடகத்தில் 16.7 சதவீதம் அதிகரித்து 13,797 மில்லியன் யூனிட்டாகவும் உயா்ந்துள்ளது. இதனால், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகத்துக்கும் குஜராத்துக்கும் இடையிலான வித்தியாசம் கடந்த ஆண்டு சுமாா் 7,000 மில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில், நிகழாண்டில் சுமாா் 4,000 மில்லியன் யூனிட்டாகக் குறைந்துள்ளது.

பெட்டிச் செய்தி...

மாநிலங்கள் வாரியான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி (பெரிய நீா்மின் நிலையங்கள் உள்பட):

மாநிலம் 2026 ஏப்-செப் 2025 ஏப்-செப் (அளவு: மில்லியன் யூனிட்)

குஜராத் 51,571.79 36,192.02

ராஜஸ்தான் 45,827.77 35,870.57

தமிழ்நாடு 32,750.17 32,082.01

கா்நாடகம் 32,105.82 31,448.84

ஹிமாசல பிரதேசம் 31,614.59 33,534.09

மகாராஷ்டிரம் 17,754.26 14,264.69

ஆந்திர பிரதேசம் 16,068.02 13,958.30

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.