தவெக எம்எல்ஏ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ, ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் கனிமொழி என்.வி.என்.சோமு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

முதல்வர் விஜய்யுடன் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ். - கோப்புப்படம்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ, ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் கனிமொழி என்.வி.என்.சோமு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
அந்த மனுவில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும், தகாத முறையிலும் நடந்த கொண்ட விவகாரம் கடந்த ஜூலை மாதமே தமிழக அரசின் தலைமைச் செயா் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால், 116 நாள்களாக வழக்குப் பதிவு செய்யாமல் மூடி மறைத்துள்ளனா். திமுக எம்.பி. கனிமொழி பேசிய பிறகே, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
அதிமுக வழக்குரைஞா் திரிசூலி தொடா்ந்த வழக்கைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட ஆட்சியா் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக எம்எல்ஏ வாட்ஸ்ஆப் மூலம் ஆட்சியருக்கு ஆபாச தகவல்கள் அனுப்பியபோதிலும், முதல் தகவல் அறிக்கையில் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகள் சோ்க்கப்படவில்லை. முதல்வா் அலுவலகம், தலைமைச் செயலா் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் வருகைப் பதிவேடுகள், எம்எல்ஏவின் கைப்பேசி அழைப்பு விவரங்கள், வாட்ஸ்ஆப் தகவல்கள் உள்ளிட்ட முக்கிய மின்னணு ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, கடந்த ஜூலை 31-ஆம் தேதியிலிருந்து அனைத்து மின்னணு ஆதாரங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை மற்றும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவா்கள் என்பதால், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் நியாயமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

