அன்பில் மகேஸுக்கு எதிரான வழக்கு: நீதிபதி அருள்முருகன் விலகல்!
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி அருள்முருகன் விலகல்...
நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் ஆஜர் (கோப்புப் படம்) - DNS
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜி. அருள்முருகன் அறிவித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி 400 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார், ஓட்டுநர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அன்பில் மகேஸ் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கட்சி நிதி என்ற பெயரில் தனியார் பள்ளிகளிடம் இருந்து பணம் வாங்கியிருப்பது தீவிரமான குற்றச்சாட்டாகும். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், அரசு துறைச் செயலாளர்கள், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் ஆகிய சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்.
தனியார் பள்ளிகளிடம் வாங்கிய பணம் எங்கு சென்றது? வங்கிப் பரிவர்த்தனைகள், முதலீடுகள், சொத்துகள், இதன் மூலம் பயனடைந்தவர்கள் யார் யார்? என்பது குறித்து எல்லாம் விசாரிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் இந்த வழக்கில், மாநில அரசின் விசாரணை நியாயமாக இருக்குமா என சந்தேகம் எழுகிறது.
புதிதாக தவெக அரசு பதவியேற்ற 7 வாரங்களில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட நபர்கள் அல்லது இந்த விவகாரத்தில் அரசியல் தாக்கம் இருக்கிறதா என விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்யும் வகையில், சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதற்கு தானே சாட்சி என தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார், எனவே, அவரிடமும் இந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜி. அருள்முருகன் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வேறொரு அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Case against Anbil Mahesh: Judge Arulmurugan recuses himself
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


