
தவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்
மதுராந்தகம், தாராபுரம் மக்களுக்கு முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளது குறித்து...

பிரசாரத்தில் முதல்வர் விஜய் - எக்ஸ்
தமிழகத்தில் லஞ்சம், ஊழலற்ற தவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை என மதுராந்தகம், தாராபுரம் மக்களுக்கு முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளதாவது:
''என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது.
உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை.
கடந்த 25ஆம் தேதி (25.09.2026) மதுராந்தகம் தொகுதியிலும், 30ஆம் தேதி (30.09.2026) தாராபுரம் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்காக நாம் பிரசாரம் மேற்கொண்டோம்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆம் தேதி (02.10.2026) மதுராந்தகம் தொகுதியிலும், இன்று (04.10.2026) தாராபுரம் தொகுதியில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டோம்.
இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது.
எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம்.
நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்; மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்! மீண்டும் நினைவூட்டுகிறோம்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள். நல்லதே நடக்கும்.வெற்றி நிச்சயம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Public support needed for TVK's governance to continue: Vijay's appeal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



