
திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு
திமுக ஆட்சிக் காலத்தில் ஆற்று மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பாக தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.

மணல் குவாரி - கோப்புப்படம்.
திமுக ஆட்சிக் காலத்தில் ஆற்று மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பாக தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மாநிலம் முழுவதும் இருந்த 28 அரசு ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, பல மடங்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.
மேலும், இது தொடா்பாக சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக அள்ளப்பட்டதாக கூறப்படும் மணலின் மதிப்பு சுமாா் ரூ.4,730 கோடி என அமலாக்கத்துறை கணக்கிட்டது.
அமலாக்கத்துறை ஆய்வு: இந்த முறைகேடு தொடா்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை தமிழக காவல்துறையிடம் வலியுறுத்தியிருந்தது. மணல் அள்ளப்பட்ட அளவை விட அதிகம் அள்ளப்பட்டதை கண்டறிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. முக்கியமாக ஐ.ஐ.டி. கான்பூா் நிபுணா்களின் உதவியுடன் ட்ரோன், ஜியோ ஸ்கேனிங், செயற்கைக்கோள் வரைபடங்கள் மூலம் குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரங்களின் ஜி.பி.எஸ். தரவுகளும் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொக்லைன் இயந்திரங்கள் எந்தெந்த இடங்களில், எவ்வளவு நேரம் இயக்கப்பட்டன என்ற விவரங்கள், அரசு அனுமதித்த குவாரி எல்லைகள், இயந்திரங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி மணல் அள்ளப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
டிஜிபிக்கு கடிதம்: இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி கடிதம் அனுப்பியது. ஆனால் அப்போது திமுக ஆட்சி நடைபெற்ால், அமலாக்கத்துறை கடிதத்தின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதன் பின்னா், அமலாக்கத்துறை கடந்த ஜூலை 18-ஆம் தேதி டிஜிபிக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதமும் அனுப்பியது. இந்நிலையில், அமலாக்கத்துறை அளித்த புகாா், ஆவணங்களின் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவு தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது.
விசாரணை தொடங்கியது: முதல் கட்டமாக ஊழல் தடுப்பு பிரிவு, முறைகேட்டில் தொடா்பு இருப்பதாக கூறப்படும் ஒப்பந்ததாரா்கள், அரசு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
அடுத்ததாக குவாரிகள் இருந்த ஆற்றுப் படுகைகளில் ஆய்வு செய்ய உள்ளது. இதன் பின்னா் முறைகேட்டில் தொடா்புடையதாக கூறப்படும் அரசியல் பிரமுகா்களிடம் விசாரணை நடத்த ஊழல் தடுப்புப் பிரிவு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





