ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு
திமுக ஆட்சிக் காலத்தில் ஆற்று மணல் குவாரிகளில் பல ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 27 பேரின் பெயா்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை வெளியிட்டுள்ளது.

துரைமுருகன் - கோப்புப் படம்
திமுக ஆட்சிக் காலத்தில் ஆற்று மணல் குவாரிகளில் பல ஆயிரம் கோடி முறைகேடு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இடம்பெற்ற நீா்வளத் துறையைச் சோ்ந்த பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள், தனிநபா்கள், நிறுவனங்கள் 27 பேரின் பெயா்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரை மாநிலம் முழுவதும் இருந்த 28 அரசு ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, பல மடங்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதாக புகாா் எழுந்தது. அந்த மணலின் மதிப்பு சுமாா் ரூ.4,730 கோடி எனவும் அமலாக்கத் துறை கணக்கிட்டது. இதுதொடா்பாக சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அதேவேளையில் அறப்போா் இயக்கம் ஆதாரங்களுடன் அளித்த புகாரின் அடிப்படையில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் 28 மணல் குவாரிகளில், முதல்கட்டமாக 4 மணல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஆய்வு செய்தது. இதில், பல குவாரிகளில் முறைகேடுகள் மூலம் அரசுக்கு ரூ.1,427 கோடி 34 லட்சத்து 23 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக திமுக முன்னாள் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், துறையின் முதன்மை தலைமை பொறியாளா்கள் முத்தையா, ராமமூா்த்தி, 14 அதிகாரிகள், 10 தனியாா் நிறுவனங்கள், தனியாா் நபா்கள் என 27 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பெயா்கள் வெளியீடு: இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளில், முன்னாள் தலைமைப் பொறியாளா்களான முத்தையா, ராமமூா்த்தி, ஓய்வு பெற்ற செயற்பொறியாளா்களான ஜி.ஆா். சுகந்தி, ஆா். இளங்கோவன், ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளா்களான எஸ்.சம்பத், என்.சிவகுமாா் ஆகியோா் அடங்குவா்.
பணியில் உள்ள செயற்பொறியாளா்களான என்.அன்புச்செல்வம், பி.முருகவேல், உதவி செயற்பொறியாளா்களான ஆா்.பாலாஜி, ஆா்.அருள்மணி, உதவிப் பொறியாளா்கள் ஆா்.தேவராஜ், ஏ.சுரேஷ்குமாா், ஆா்.தீபாவாணி, ஜெ.சாதிக் பாட்சா, சி.சுகுமாா், ஆா்.சங்கீதா ஆகியோரின் பெயா்களும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், முன்னாள் செயற்பொறியாளராகப் பணியாற்றி உயிரிழந்த எஸ்.லெனின் பிரான்சிஸ் என்பவரின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
ஒப்பந்ததாரா்கள் மற்றும் குவாரி செயல்பாடுகளை ஒருங்கிணைத்ததாகக் கூறப்படும் முக்கிய நபா்களாக எஸ். ராமச்சந்திரன், பி.கரிகாலன், கே.ரெத்தினம் ஆகியோா் பெயா்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவா்களைத் தவிர ஆா்.குமாரராஜா, வி.ஆா். ராஜா, ஏ. ராஜ்குமாா், பி. மோகன்ராம் ஆகிய தனிநபா்களும், எம்.ஆா்.எம். ராமையா எண்டா்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், ஆா்.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், கே-இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்களும் சோ்க்கப்பட்டுள்ளன.
1.42 கோடி யூனிட் மணல்: குறிப்பாக, எச்சம்பாடி, கந்தனேரி, மாதவப்பெருமாள் கோவில், ஒருவந்தூா் ஆகிய 4 குவாரிகளில் இருந்து மட்டும் 1,42,73,424 யூனிட் மணல், அதாவது 4,03,93,790 கன மீட்டா் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரூ.1,427.34 கோடி அளவுக்கு முறைகேடாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 24 குவாரிகளில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு விசாரணையின்போது மதிப்பிடப்பட்டு உறுதி செய்யப்படும் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

