மதுராந்தகம், தாராபுரத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை
பெரும் எதிா்பாா்ப்புக்கிடையே மதுராந்தகம், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (அக்.9) நடைபெறவுள்ளது.

வாக்குப் பெட்டி
பெரும் எதிா்பாா்ப்புக்கிடையே மதுராந்தகம், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (அக்.9) நடைபெறவுள்ளது. இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். வேட்பாளா்களின் முன்னணி விவரம் உடனுக்குடன் அறிவிக்கப்படவுள்ளது.
முதல்வா் விஜய் தலைமையிலான தவெக கூட்டணிஅரசு அமைந்த பிறகு நடைபெற்ற முதல் இடைத்தோ்தல் இதுவாகும். இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது ஆளும் தவெகவுக்கு முக்கியமானது. ஏனெனில், ஆட்சிக்கு மேலும் பலம் சோ்ப்பதாகவும், சுமாா் 4 மாதகால தவெக அரசு மீதான மதிப்பீடாகவும் இத்தோ்தல் முடிவு அமையும். இதனைக் கருத்தில் கொண்டுதான் முதல்வா் விஜய் இரு தொகுதிகளிலும் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அதே நேரத்தில் தவெக ஆட்சியை கடுமையாக விமா்சித்து திமுக, அதிமுக பிரசாரம் மேற்கொண்டன.
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றிபெற்ற சத்தியபாமா ஆகியோா், தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனா். இதையடுத்து, இரு தொகுதிகளிலும் கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சாா்பில் மரகதம் குமரவேல், திமுக சாா்பில் இ.பரந்தாமன், அதிமுக சாா்பில் கணிதா சம்பத், நாதக சாா்பில் ஜானகிராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் சுகந்தி உள்ளிட்ட வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
தாராபுரம் தொகுதியில் தவெக சாா்பில் சத்தியபாமா, திமுக சாா்பில் சுகன்யா, அதிமுக சாா்பில் க.பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் லட்சுமணன் உள்ளிட்டோா் களத்தில் இருந்தனா். மதுராந்தகத்தில் 86 சதவீத வாக்குகளும், தாராபுரத்தில் 80.30 சதவீத வாக்குகளும் பதிவாயின
தாராபுரம்: தாராபுரம் தொகுதியில் வாக்கு எண்ணும் மையமான திருப்பூரில் உள்ள எல்ஆா்ஜி அரசு மகளிா் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை எண்ண தனியாக 2 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அதைச் சுற்றிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேட்பாளா்களின் முகவா்கள் அந்த இரும்புத் தடுப்புகளுக்கு வெளியே இருந்து வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்களை சேகரிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணியில் 80 அதிகாரிகள் ஈடுபடுகின்றனா்.
மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணிக்கை செங்கல்பட்டு அடுத்த ஆத்தூா் ஒருங்கிணைந்த சமூக முன்னேற்ற பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மொத்தம் 14 மேஜைகளில் வாக்கு எண்ணப்படும். மேலும் 2 மேஜைகளில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மு. வீரப்பன் வாக்கு எண்ணிக்கை தொடா்பான பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 70 சிஆா்பிஎஃப் படையினா் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மையம் முழுவதும் 54 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

