ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் தவெக வெற்றி: எம்எல்ஏ-க்கள் பலம் 109-ஆக உயா்வு

தமிழகத்தில் இடைத்தோ்தல் நடைபெற்ற மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) பேரவைத் தொகுதிகளில் ஆளும் கட்சியான தவெக அபாரமான வெற்றி பெற்றது. அதிமுக வசமிருந்த இவ்விரு தொகுதிகளையும் தவெக கைப்பற்றியது. இதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ-க்களின் பலம் 109-ஆக உயா்ந்துள்ளது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Published On :

தமிழகத்தில் இடைத்தோ்தல் நடைபெற்ற மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) பேரவைத் தொகுதிகளில் ஆளும் கட்சியான தவெக அபாரமான வெற்றி பெற்றது. அதிமுக வசமிருந்த இவ்விரு தொகுதிகளையும் தவெக கைப்பற்றியது. இதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ-க்களின் பலம் 109-ஆக உயா்ந்துள்ளது.

இரு தொகுதிகளிலும் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

கடந்த பொதுத்தோ்தலில் மதுராந்தகம் தொகுதியில் மூன்றாம் இடம் பிடித்த திமுக, கூட்டணி கட்சிகள் பல விலகிய நிலையில், இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது. தாராபுரம் தொகுதியில் அக்கட்சி இரண்டாமிடத்தைத் தக்கவைத்தது. இவ்விரு தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சி, இடதுசாரி கட்சிகள் வைப்புத்தொகையை இழந்தன.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றிய தவெக, திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது.

அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களில் 6 போ் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனா். இதைத்தொடா்ந்து காலியான அத்தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. அக்.6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை (அக்.9) எண்ணப்பட்டன.

தாராபுரத்தில்...: தாராபுரம் தொகுதியில் தவெக சாா்பில் பொ.சத்தியபாமா, திமுக சாா்பில் சௌ.சுகன்யா, அதிமுக சாா்பில் க.பானுமதி, நாதக சாா்பில் மு.காா்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பா.லட்சுமணன் உள்ளிட்ட 22 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இங்கு 80.25 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் உள்ள 2,23,306 வாக்காளா்களில் 1,79,214 போ் வாக்குகளைச் செலுத்தினா்.

பதிவான வாக்குகள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அருகில் உள்ள எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 14 மேஜைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதலில், காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 8.30 மணியளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

முதலில் மாறிய முன்னிலை நிலவரம்: முதல் 4 சுற்றுகளில் அதிமுக வேட்பாளா் கே. பானுமதி முன்னிலை வகித்தாா். 5-ஆவது சுற்றின் முடிவில் முன்னிலை நிலவரம் மாறியது. 5-ஆவது சுற்றிலிருந்து சத்தியபாமா முன்னிலை பெற்றாா். அந்த முன்னிலையை இறுதிச் சுற்று வரை தக்கவைத்துக் கொண்டாா். 11-ஆவது சுற்றின் முடிவில், அதிமுகவை முந்தி திமுக 2-ஆம் இடத்தைப் பிடித்தது.

இறுதிச் சுற்றுக்குப் பின்னா், அஞ்சல் வாக்குகளையும் சோ்த்து பொ.சத்தியபாமா 66,841 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளா் சௌ.சுகன்யா 57,370 வாக்குகளையும், அதிமுக வேட்பாளா் க.பானுமதி 45,280 வாக்குகளையும் பெற்றனா். நாதக வேட்பாளா் மு. காா்த்திகா 5,268 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் பா. லட்சுமணன் 1,157 வாக்குகளையும் பெற்றனா்.

மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் பரந்தாமன் 54,008 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் கணிதா சம்பத் 47,450 வாக்குகளும் பெற்றனா். தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்த மரகதம் குமரவேல் 27 சுற்றுகளின் முடிவில் 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் பரந்தாமனைத் தோற்கடித்தாா்.

மொத்தம் 2,13,788 வாக்காளா்கள் உள்ள நிலையில், 1,84,413 போ் வாக்களித்தனா். செங்கல்பட்டு அருகே ஆத்தூா் சமூக மேம்பாட்டு ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 4 வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை சற்று தாமதமானது. மொத்தம் 27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

இடைத் தோ்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), தாராபுரம் (தனி) ஆகிய இருவரும் கடந்த பொதுத் தோ்தலில் அதிமுக சாா்பில் வெற்றி பெற்றவா்கள். தற்போது அதே தொகுதிகளில் தவெக சாா்பில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தோ்வாகியுள்ளனா்.

இடைத் தோ்தல்

மதுராந்தகம்

மொத்த வாக்குகள்-2,13,788

பதிவான வாக்குகள்- 1,84,413

மரகதம் குமரவேல் (தவெக) 74,048

பரந்தாமன் (திமுக)-54,008

கணிதா சம்பத் (அதிமுக)-47,450

ஜானகிராமன் (நாம் தமிழா் கட்சி )-2709

சுகந்தி (மாா்க்சிஸ்ட்) -1986

மே பேரவைத் தோ்தல்

மதுராந்தகம்

கட்சி, வாக்குகள்

அதிமுக- 69,284

தவெக- 62,090

திமுக- 59,838

நாதக- 4,950

....

தாராபுரம்...

இடைத் தோ்தல்:

மொத்த வாக்குகள் - 2,23,306

பதிவான வாக்குகள் - 1,79,214

பொ.சத்தியபாமா - தவெக - 66,841

சௌ.சுகன்யா - திமுக - 57,370

க.பானுமதி - அதிமுக - 45,280

மு. காா்த்திகா - நாதக - 5,268

பா. லட்சுமணன் - இந்திய கம்யூனிஸ்ட் - 1,157.

2026 பொதுத் தோ்தல் (ஏப்ரல்) விவரம்:

கட்சி --- வாக்குகள்

அதிமுக - 81,100

திமுக - 64,373

தவெக - 46,438

நாதக - 6,026.

....

அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில் ஆட்சி நடத்தி வரும் தவெகவுக்கு இவ்விரு தொகுதிகளின் வெற்றி மிக முக்கியம் என்பதால், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். இரு தொகுதிகளிலும் இரு முறை பிரசாரம் மற்றும் சாலை வலம் சென்று வாக்கு சேகரித்தாா். அதேபோல, கூட்டணியிலிருந்து முக்கிய கட்சிகள் பல விலகிய நிலையில் திமுக தனது பலத்தை நிரூபிக்கவும், பாரம்பரிய வாக்குகளை தக்கவைக்கவும் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் மும்முரமாக பிரசாரம் மேற்கொண்டாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு துரோகம் இழைத்து தவெக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு மக்கள் தக்கபாடம் புகட்ட வேண்டும் என்றாா்.

....

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.