சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!
மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் விஜய்.

சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் விஜய் இன்று(அக். 14) ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், காரப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் மடுவுவை நேரில் பார்வையிட்டு, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிகளில் நீர்வளத் துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்.
தென் சென்னையின் உயிர்நாடி வடிகாலாக ஒக்கியம் மடுவு விளங்குகிறது. தென் சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஏரிகளின் உபரி நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேர்ந்து, ஒக்கியம் மடுவு, தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் முட்டுக்காடு முகத்துவாரம் வழியாக மட்டுமே கடலைச் சென்றடைகிறது. 2023 டிசம்பரில் மிக்ஜம் புயலின்போது இந்த நீர்வழி அடைபட்டதால், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதி மக்கள் பல நாள்கள் தண்ணீர் தேக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.
இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், நீர்வளத் துறை ஒக்கியம் மடுவுவைத் தூர்வாரி ஆழப்படுத்தி அகலப்படுத்தியுள்ளதுடன், கண்ணகி நகர் போன்ற குடியிருப்புப் பகுதிகளைப் பாதுகாக்க வெள்ளத் தடுப்புச் சுவர் அமைத்து, கரைகளையும் பலப்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக வெள்ள ஓட்டத்திற்குத் தடையாக இருந்த, 70 மீட்டருக்கும் குறைவான நீர்வழி கொண்ட காரப்பாக்கம் பாலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் 120 மீட்டர் நீர்வழியுடன் கூடிய அகலமான உயர்மட்டப் பாலமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதனால் வெள்ள நீர் தடையின்றிக் கடலுக்குச் செல்ல வழி ஏற்படும்.
பருவமழை முன்னேற்பாடாக, ஒக்கியம் மடுவு, வேளச்சேரி, நாராயணபுரம், ஆதம்பாக்கம், கோவிலம்பாக்கம் ஏரிகள், சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள வடிகால்கள் மற்றும் அடையாறு முதல் சோழிங்கநல்லூர் வரையிலான தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் முழுவதும் ஆகாயத் தாமரை, களைச் செடிகள், வண்டல் மற்றும் மிதக்கும் கழிவுகள், மிதவை இயந்திரங்கள் மற்றும் கனரக இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள உபரிநீர்க் கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டு, வெள்ள ஒழுங்கிகளின் மதகுக் கதவுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வெள்ளநீர் விரைவாகக் கடலில் கலக்கும் வகையில் முட்டுக்காடு முகத்துவாரம் மாதந்தோறும் திறந்த நிலையில் பராமரிக்கப்படுகிறது.
முதல்வர் இந்த ஆய்வின்போது, அனைத்துப் பணிகளையும் பருவமழை தீவிரமடைவதற்கு முன் விரைந்து முடிக்கவும், பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களில் இயந்திரங்களைத் தயார் நிலையில் வைக்கவும், நீர்மட்டத்தை இரவு பகலாகக் கண்காணிக்கவும், நீர்வளத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒருங்கிணைந்து செயல்படவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Summary
Chief Minister Vijay inspected the stormwater drain works underway in the Okkiyam Maduvu area of Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


