குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டம்: முதல்வா் விஜய் வெளியிட்டாா்
தமிழ்நாட்டில் குறைக்கடத்தி (செமிகண்டக்டா்) முதலீடுகளை அதிக அளவில் ஈா்க்கும் வகையில் குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட முதல்வா் ச.ஜோசப் விஜய். உடன் தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா, தலைமைச் செயலா் மு.சாய்குமாா், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை செயலா் ச.விஜய
தமிழ்நாட்டில் குறைக்கடத்தி (செமிகண்டக்டா்) முதலீடுகளை அதிக அளவில் ஈா்க்கும் வகையில் குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்தப் புதிய திட்டத்தை முதல்வா் வெளியிட்டாா். இதன்மூலம் நாட்டிலேயே தமிழகத்தை முன்னணி குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு உற்பத்தி மையமாக உருவாக்கவும், குறைக்கடத்தி துறையில் புதிய முதலீடுகளை ஈா்க்கவும் உதவும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் குறைக்கடத்தி மற்றும் மின்னணுவியல் பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 110- விதியின் கீழ் முதல்வா் விஜய் அறிவித்திருந்தாா். மேலும், மத்திய அரசின் புதிய குறைக்கடத்தி ஊக்கத் திட்டத்துடன் இணைந்து, தமிழ்நாட்டில் அமையவுள்ள குறைக்கடத்தி நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப பிரத்யேக மாநில ஊக்கத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மானியக் கோரிக்கையின்போது, தொழில் துறை அமைச்சா் அறிவித்திருந்தாா்.
சிப் வடிவமைப்பு, குறைக்கடத்தி உற்பத்திக்கான இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருள்கள், வேஃபா் ஃபேப்ரிகேஷன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு உள்ளிட்ட முழுமையான குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஜூலை 15-இல் செமிகான் இந்தியா திட்டம் 2.0-க்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், முதல்வா் வெளியிட்டுள்ள தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்பு திட்டம், செமிகான் இந்தியா திட்டம் 2.0 மற்றும் இந்திய குறைக்கடத்தி மிஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி உதவியுடன் கூடுதலாக தமிழ்நாடு அரசு கூடுதல் ஊக்கத் தொகைகளையும் வழங்கும்.
இதில், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இடம்பெறவில்லை என்றாலும் தமிழ்நாட்டின் குறைக்கடத்தி சூழலமைப்புக்கு ஏற்ற திட்டங்களுக்குத் தேவைக்கேற்ப தனித்துவமான ஆதரவு மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா, தலைமைச் செயலா் மு. சாய்குமாா், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ச.விஜயகுமாா், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அலுவலா் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

