அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!
தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் குறித்த ஆர்டிஐ கேள்விகளுக்கு பதிலளிக்காததற்கு உதயநிதி கண்டனம்...
உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்
முதல்வரின் ஆலோசகர்கள் நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா அரசாணைகளையும் ஒளித்து வைப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று பதிலளிக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”பொய்ச்செய்திகளுக்கு எதிராக போரிட, திமுக ஆட்சியின் போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு தமிழ்நாடு உண்மை சரிபார்ப்புப் பிரிவு தொடங்கப்பட்டது.
அதனை இன்றைய சர்க்கஸ் சர்க்கார், விர்சுவல் அப்யூஸர் கும்பலைக் கொண்டு தகவல் நம்பகத்தன்மை பிரிவு என்று மாற்றி இருக்கிறது.
இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? இதில் யார் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளார்கள்? என்னென்ன பணிகளை செய்கிறார்கள் ? இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? என்ற கேள்விகளை எல்லாம் ஆர்டிஐ மூலம் ஜீவிதா என்பவர் கேட்டுள்ளார்.
ஆனால், அவர் ஆர்டிஐ மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது.
வெளிப்படையான அரசாங்கத்தை தருவேன் என்று வாயால் வடை சுட்ட முதலமைச்சர், தன்னுடைய ஆலோசகர்கள் நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா அரசாணைகளையும் ஒளித்து வைப்பது ஏன்?
ரசிகர்கள் என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி - ஆபாச தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தகுதியற்ற இணையக் கூலிப்படைக்கு அந்தப்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகிவிடும் என்பதாலா?
உண்மை எது - பொய் எது என்று சொல்லும் தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல.
உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த அரசு தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Why are government orders being kept hidden? Udhayanidhi questions the Chief Minister!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


